எகிப்தை தொடர்ந்து லிபியா நாட்டிலும் அதிபர் கடாபியை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவத்தை ஏவி விட்டு அடக்கு முறையில் இறங்கினார்.
இதையடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டு (நேட்டோ) படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் திரிபோலியில் அதிபர் கடாபி தங்கியுள்ள “பாப்-அல்-அஜீசியா” மாளிகை கடுமையாக சேதம் அடைந்தது.
நேற்று முன்தினம் 2-வது நாளாக நேட்டோ படைகள் திரிபோலியில் தாக்குதல் நடத்தின. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலில் கடாபி எழுந்து நடமாட முடியாத அளவுக்கு காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக லிபியாவை விட்டு வேறு எங்கோ எடுத்துச்சென்று விட்டதாக லிபியாவில் வதந்திகள் பரவி உள்ளன. அவர் உயிரோடு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் கடாபியின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ கேசட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நேட்டோ படைகளால் என்னை கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன் என்றும் கூறி உள்ளார்.
தன்னைப்பற்றி வதந்தி பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ராணுவம் தன்னை விட்டு விலகாமல் இருக்கவும் கடாபி இந்த ஆடியோ கேசட்டை வெளியீட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெளிவாகி உள்ளது. என்றாலும் அவரால் வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார் என்றும், கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் எங்கோ பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கடாபி நன்றாக இருக்கிறார், திரிபோலியிலேயே தங்கி இருக்கிறார் என்று லிபியா அரசின் பத்திரிகை தொடர்பாளர் மூசா இப்ராகிம் அறிவித்துள்ளார். ஆனால் கடாபி திரிபோலியில் இல்லை, அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்கோ பிராட்டினி கூறினார்.
0 comments :
Post a Comment