ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசா- ராடியாவிடம் மீண்டும் விசாரணை; சி.பி.ஐ. போலீஸ் நடவடிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தகவல் வெளியிட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. கருதுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து பிப்ரவரி மாதம் 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 8 மற்றும் 15-ந் தேதிகளில் டெல்லி, சென்னை, பெரம்பலூர் நகரங்களில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அரசியல் இடைத்தரகர் ராடியா, ஹவாலா தரகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது லேப்-டாப்கள், பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள், டைரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
கம்ப்யூட்டர் தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் 3 பேர் அப்ரூவராக மாறி பல தகவல்களை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக தரகர் நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 16 மணி நேரம் நடந்த அந்த விசாரணையில் ஆ.ராசாவிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. கம்ப்யூட்டர் தகவல்களை ஆதாரமாக காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆ.ராசா மற்றும் தரகர் நீரா ராடியா இருவரும் அளித்த பதில்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர். அந்த பதிவுகளை கடந்த 2 நாட்களாக அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பல சர்ச்சையான விஷயங்களில் அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை.
குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தது, மற்றும் வங்கி கடன்கள் பெற்றது போன்றவைகளில் சி.பி.ஐ. அதிகாரிளுக்கு இன்னமும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தரகர் நீரா ராடியா இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஆ.ராசா, நீரா ராடியா இருவருக்கும் சி.பி.ஐ. விரைவில் அழைப்பு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்தக்கட்ட விசாரணையின்போது ஆ.ராசா - நீரா ராடியா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி அதிகம் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது. 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றும் தொலை தொடர்பு சேவைக்கான உரிமத்தைப் பெற்றது. இதற்கு முன்பு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், தொலை தொடர்பு துறையில் எந்த ஒரு முன் அனுபவம் பெற்றிருக்கவில்லை.
அத்தகைய நிறுவனம் வங்கிகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.2,500 கோடி வரை கடன்களைப் பெற்றது. இதில் நீரா ராடியா தரகராக இருந்து பேசியுள்ளார். இதில் நடந்த விதி மீறல்கள் குறித்து ஆ.ராசா, நீரா ராடியா இருவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த 15-ந் தேதி நீரா ராடியா வீட்டில் நடந்த சோதனையின் போது சில கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த பல ரகசிய தகவல்கள் ஸ்பெக்ட்ரம் முறை கேட்டுக்கான ஆதாரங்களாக மாறி உள்ளன. அந்த ஆதாரங்களை காட்டி ராடியாவிடம் மீண்டும் விளக்கம் கேட்க உள்ளனர்.
டாடா நிறுவனம் தவிர வேறு எந்த நிறுவனத்துக்கும் தான் பணியாற்றவில்லை என்று நீரா ராடியா கூறி வருகிறார். ஆனால் அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளில் அவர் வங்கி கடன், ஹவாலா பண பரிமாற்றம் உள்பட பல விஷயங்களை கையாண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது பற்றி ஏற்கனவே நீரா ராடியா கொடுத்த விளக்கம் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே நீரா ராடியாவிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்தும் போது, கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிகளில் கடன்கள் பெறுவதற்காக தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரசே கடன் கொடுக்க சொல்லியதால் பொதுத்துறை வங்கிகள், 5 தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்களை அள்ளிக்கொடுத்துள்ளன.
இதற்கு காரணமான கையெழுத்திட்ட அதிகாரிகளையும் தற்போது சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தும்போது மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது.
தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளதால் தற்போது அனைவரது கவனமும், அவர்களது பக்கம் திரும்பி உள்ளது.
இதற்கிடையே ஹவாலா தரகர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 3 நாடுகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான பணம் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த நாடுகளின் ஒத்துழைப்பை கோரி சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது.
இது தவிர ஆ.ராசா, நீரா ராடியா உள்பட பலரிடம் வங்கி கணக்கு பணபரிமாற்ற விபரங்களை சி.பி.ஐ. கேட்டுள்ளது. குறிப்பாக நீரா ராடியா வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணத்துக்கு சி.பி.ஐ. கணக்கு கேட்டுள்ளது.
மற்றொரு புறத்தில் அமலாக்கப் பிரிவும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.