background img

புதிய வரவு

அட்சய திருதியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை

சென்னை, மே 6: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது.

அட்சய திருதியை நாளில் சொத்துகள் வாங்கினால், சொத்துகள் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக தங்கம் வாங்க மிகவும் உகந்த நாளாக மக்கள் கருதுகின்றனர்.

இதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக நகைக் கடைகளுக்குச் செல்கின்றனர்.

இதற்கிடையே, மக்களைக் கவரும் வகையில், தங்க நகை வியாபாரிகளும் அட்சய திருதியை நாளில் பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் அட்சய திருதியை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் தியாகராய நகர், என்.எஸ்.சி. போஸ் சாலை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பின் தியாகராய நகர் பகுதியில் திரும்பும் பக்கமெல்லாம் பெண்கள் கூட்டம் காணப்பட்டது.

சென்னை நகரக் கடைகளில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ரூ.600 கோடி மதிப்புக்கு தங்கம் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டு விற்பனையைவிட 10 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

கோயில்களில் வழிபாடு: அட்சய திருதியை நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை, தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பூஜையில் வைக்கப்பட்ட தங்க, வெள்ளிக் காசுகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலிலும் தங்கக் காசு விற்பனை நடந்தது.

வங்கிகளில் விற்பனை: அட்சய திருதியை முன்னிட்டு வங்கிகளிலும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பல வங்கிகளில் சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டன. இந்தியன் வங்கியில் மட்டும் கடந்த நான்கு நாள்களில் 284 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 130 கிலோ விற்பனை ஆனதாகவும் அந்த வங்கியின் பொது மேலாளர் மகாதேவன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இந்தியன் வங்கியில் 153 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மகாதேவன் கூறினார்.

தங்கம் விலை குறைந்தது: இதற்கிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை சவரன் ரூ.16 ஆயிரத்து 272 என்ற விலையில் விற்பனை ஆனது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.216 குறைவாகும்.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,034.

வியாழக்கிழமை விலை:

ஒரு சவரன்: ரூ.16,488.

ஒரு கிராம்: ரூ.2,061.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts