background img

புதிய வரவு

குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்

ஸ்தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை ஊராட்சி காளியாங்குப்பத்தில் புகழ்பெற்ற காசேரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காடுகள் நிறைந்த இந்த பகுதியில் இந்த கோவில் எப்படி தோன்றியது என்று ஒரு வரலாறு கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய கிராமத்தை உருவாக்க திட்டமிட்டனர். அங்கு நிறைந்திருந்த காசான் செடிகளை அகற்ற விவசாயி பெருமாள் கடப்பாறையால் தோண்டினார். அப்போது பூமிக்கடியில் ஒரு சிலை கிடைத்ததாகவும் காசான் செடிக்கு அடியில் கிடைத்ததால் இந்த அம்மன் காசேரி அம்மன் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதலில் ஓலைக் கொட்டகையில் இருந்த இந்த கோவில் பின்னர் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் இயங்கி வருகிறது. இங்குள்ள காசேரி அம்மன் உற்சவர் சிலை மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறது.

பூஜைகள்:

காசேரி அம்மன் கோவிலில் வெள்ளிக் கிழமை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு சென்னை, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

சிறப்புகள்:

திருமணம் வரம் வேண்டி வரும் பெண்கள் குளித்துவிட்டு வந்து அம்மனை 9 முறை வலம் வந்து வழிபடுவார்கள். எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையை பூசாரியிடம் கொடுத்து காசேரி அம்மன் மடியில் வைத்து பூஜை செய்து வாங்கி செல்வார்கள்.

அவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வேப்பிலையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். பின்னர் எலுமிச்சம் பழம் தோலை தலையில் தேய்த்து குளிப்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதேபோல் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் குளித்து விட்டு இந்த கோவிலுக்கு வந்து அம்மனை 9 முறை சுற்றி வழிபடுவார்கள். அரச மரத்தையும் 9 முறை சுற்றுவார்கள். இதையடுத்து எலுமிச்சம் பழத்தையும், வேப்பிலையையும் அம்மன் முன் வைத்து பூஜை செய்து பூசாரியிடம் பெற்று வீட்டுக்கு செல்வார்கள்.

அங்கு பழைய சாதத்தில் எலுமிச்சம் பழ சாறுடன் வேப்பிலையையும் சேர்த்து உண்பார்கள். இவ்வாறு 48 வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் வேப்பிலை சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பெண்கள் அங்கு வந்து பூசாரிக்கு ஆடைகள் மற்றும் தட்சணைகள் வழங்கி அம்மனுக்கு 108 எலுமிச்சை பழங்களும் மாலையாக அணிவித்து வணங்கி செல்கின்றனர்.

வித்தியாசமான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி:

காசேரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை யொட்டி 3 நாள் உற்சவம் நடைபெறும். 3-வது நாள் நடைபெறும் காத்தான் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். காசேரி அம்மனுக்கு காத்தவராயன், போத்திராஜன் ஆகியோர் காவலர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

காசேரி அம்மனின் அருள் சக்தியை விளக்கும் வகையில் நாடக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் நாடக கலைஞர் ஒருவர் காத்தவராயனாக வேடமிட்டு நடிக்கிறார். அவர் கழுமரம் ஏறுவதற்காக கோவிலில் 60 அடி உயரமுள்ள கழுமரம் அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் 18 படிகள் இருக்கும் அதிகாலை 4 மணிக்கு நாடக கலைஞர் அந்த கழுமரத்தில் ஏறத் தொடங்குவார். ஒவ்வொரு படியிலும் மணி நேரம் நின்று தேவதங்கள் ஓதி, காசேரி அம்மன் புகழ்பாடி பூஜை செய்வார். ஒவ்வொரு படியாக ஏறி மதியம் 10 மணி அளவில் கழுமரத்தின் உச்சிக்கு சென்று சூரியவழிபாடு செய்வார்.

கோவிலில் பூஜை செய்து வைக்கப்பட்ட 100 எலுமிச்சம் பழங்களையும் கீழே குவிந்திருக்கும் பெண்களுக்கு வேதம் கூறி வீசுவார். ஒவ்வொருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை பெறுவார்கள். அந்த எலுமிச்சம் பழம் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை செழிக்கும் என்பது ஐதீகம்.

அன்னதானம்:

சித்திரா பவுர்ணமி நிகழ்ச்சியையொட்டி கோவிலில் 3-ம் நாள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு காசேரி அம்மனின் சக்தி கரகம் காத்தவராயன் சாமி சிலையுடன் மேள தாளம் முழங்க காளியாங்குப்பத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் வலம் வரும்.

அப்போது 1000 பெண்கள் நேர்த்தி கடன் செலுத்த விரதமிருந்து கேழ்வரகு கூழ் குடம் ஏந்தி சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இறுதியில் கோவிலின் எதிர்புறம் அமைந்துள்ள பந்தலில் வரிசையாக கூழ் குடத்தை வைப்பார்கள். காசேரி அம்மனிடம் உத்தரவு பெற்ற பின் ஏழைகளுக்கு, கிராம மக்கள் இந்த கூழினை வழங்குவார்கள்.

மேலும் இரவு 10 மணி அளவில் கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும் கிராம மக்கள் சார்பில் நடைபெறும். அப்போது பெரிய அண்டாவில் திரட்டி வைக்கப்பட்ட உணவை ஏழைகளுக்கு கிராம மக்கள் வழங்குவார்கள். இந்த கோவிலில் தீ மிதித்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் கிடையாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடும், பட்டினியோடும் செல்லக் கூடாது. கோவில் உற்சவத்தின் போது முக்கிய விழாவான கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அம்மன் கூறியதால் இந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தின் மகிமை:

பொதுவாக அம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிடப்படும். ஆனால் காசேரி அம்மன் கோவிலில் இந்த பலியிடும் நிகழ்ச்சிகள் கிடையாது. கோவிலில் எலுமிச்சம் பழம் மற்றும் வேப்பிலையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தில் அம்மனின் சக்தி முழுவதும் அடங்கி உள்ளதாக நம்பப்படுகிறது.

எலுமிச்சம் பழத்தை தெய்வகனி என்று பக்தர்கள் கூறுகின்றனர். காசேரி அம்மன் உற்சவ சிலையில் உள்ள நாகப்பாம்பின் மீது பூவை சுற்றி அதன் மேல் எலுமிச்சம் பழத்தை வைத்து குறிகேட்கும் பழக்கம் உள்ளது. எலுமிச்சம் பழம் துள்ளி கீழே விழுந்த பின்பே உற்சவ நிகழ்ச்சி தொடங்குகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமத்துடன் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் வழங்கப்படுகிறது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ் வசதி உள்ளது. முதலில் விழுப்புரம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் காளியாங்குப்பத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts