background img

புதிய வரவு

எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! * இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி பெற தோனி அணி காத்திருக்கிறது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தோனி வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
ஏழாவது வெற்றி:
சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி கண்டது. கடைசியாக கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, "டக்வொர்த்த-லீவிஸ்' முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி கண்டது. எனவே இன்று சென்னை அணியினர், ராஜஸ்தானுக்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், ஏழாவது வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
பத்ரிநாத் நம்பிக்கை:
கோல்கட்டாவுக்கு எதிராக சென்னை அணியின் பேட்டிங் படுமந்தமாக இருந்தது. ஒன்பது ஓவர்கள் வரை ஒரு "பவுண்டரி' கூட அடிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரராக சொதப்பி வரும் முரளி விஜய், எழுச்சி கண்டால் நல்லது. எட்டு போட்டிகளில் 342 ரன்கள் எடுத்துள்ள மைக்கேல் ஹசி, இன்று கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல துவக்கம் அளிக்கலாம். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கல், தோனி, பத்ரிநாத் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் சேர்க்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
அஷ்வின் அபாரம்:
சென்னை அணியின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. இளம் வீரர் அஷ்வின் சுழலில் நம்பிக்கை அளித்து வருகிறார். இவருடன் ஜகாதி, ரந்திவ், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் சுழலில் சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கிறது. வேகத்தில் ஆல்பி மார்கல், மிரட்டுகிறார். இவருக்கு போலிஞ்சர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம்.
பதிலடி வாய்ப்பு:
ராஜஸ்தான் அணி, இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் 5ல் வெற்றி கண்டது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, ஒரு புள்ளி பெற்றது. எனவே ராஜஸ்தான் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
டிராவிட் எதிர்பார்ப்பு:
ராஜஸ்தான் அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன், இதுவரை சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இன்று இவர் எழுச்சி பெறும் பட்சத்தில் சூப்பர் துவக்கம் அளிக்கலாம். அனுபவ டிராவிட், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பேட்டிங்கில் பலம் சேர்க்கிறது. இன்றும் இவர் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசோக் மேனரியா, ஜோகன் போத்தா, ராஸ் டெய்லர், அஜின்கியா ரகானே உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' சாதிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
சாதிப்பாரா வார்ன்:
ராஜஸ்தான் அணியில் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் இருப்பது பலம். இவர் இத்தொடருக்கு பின், ஓய்வு பெற இருப்பதால், இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு போத்தா, மேனரியா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்தில் ஷேன் வாட்சன், திரிவேதி, பின்னி உள்ளிட்டோர் மிரட்டும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.
---
ஒன்பதாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோதவுள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 4ல் வெற்றி கண்டன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts