background img

புதிய வரவு

வெற்றி பெறுமா ராகுலின் "ஓரம் கட்டும்' திட்டம்?


தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக மாநில கட்சிகளின் ஆதரவோடு தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு, அக்கட்சியின் செல்வாக்கு தேர்தலுக்கு தேர்தல் சரிந்து வருவதே முக்கிய காரணம்.

இன்றைய நிலையில், வயதான தலைவர்களின் பிடிக்குள் தான் கட்சி இருக்கிறது. இந்த தலைவர்கள் மத்தியில் நிலவும் பிரச்னைகளால் பல்வேறு கோஷ்டிகள் உருவாகி, கட்சியின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகின்றன.இந்நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ராகுல், கட்சி பொறுப்புகளை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க நினைத்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்ட அவர், இளைஞர் காங்கிரசை வலுப்படுத்த துவங்கினார். நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களை கட்சி பணியில் களம் இறக்கியுள்ளார்.
இவ்வாறு ராகுலால் களம் இறக்கப்பட்டவர்கள் கடந்த தேர்தல்களில் சிறப்பான களப்பணியாற்றினார்கள். கட்சியை வலுப்படுத்த தேவையான செயல்களை மேற்கொண்ட இவர்களை பார்த்து, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
சமீபத்தில் நடந்த தமிழகம் மற்றும் கேரள சட்டசபை தேர்தலில், ராகுலின் சிபாரிசின் பேரில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில், இளைஞர் காங்கிரசாருக்கு 10 சீட்டுகளை ஒதுக்கும்படியும், கேரளாவில் ஒதுக்கப்பட்ட 81 தொகுதிகளில், 24 சீட்டுகளை ஒதுக்கியும் ராகுல் உத்தரவிட்டார். ராகுலின் இந்த உத்தரவு, எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய் வார்த்த மாதிரியாகிவிட்டது. ஏற்கனவே, இளைஞர் காங்கிரசாரின் நடவடிக்கைகளால் எரிச்சலில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தொகுதி ஒதுக்கீட்டிலும் இளையவர்களுக்கு சீட் கொடுக்க உத்தரவிட்டது மேலும் எரிச்சலூட்டியது.இதனால், கடந்த சட்டசபை தேர்தலில், பல தொகுதிகளில் மூத்த காங்கிரசார் பலர் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

அதேவேளையில், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக பணி புரிய துவங்கினர். கோஷ்டி பூசலை ஒழித்து, கட்சிக்கு உள்ளாட்சி மட்டத்தில் இருந்து புத்துயிர் ஊட்டினால் மட்டுமே காங்கிரஸ் வளரும் என்ற கருத்தில் ராகுல் காய் நகர்த்த துவங்கிவிட்டார். இதற்கு அச்சாரமாகவே இளைஞர் காங்கிரசாருக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் திட்டத்தை ராகுல் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து துவக்கி விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், மாநிலங்களில் நிலவும் கோஷ்டிகளை ஒழித்து, கட்சியை வளர்ச்சிப்பாதையில் திருப்ப வேண்டும் என்பதே ராகுலின் திட்டம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இன்று நேற்றல்ல, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில், ராகுல் வெற்றி பெறுவாரா அல்லது கோஷ்டிகள் வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts