background img

புதிய வரவு

இந்திய அணிக்கு காம்பிர் கேப்டன்! * பத்ரி நாத், சகாவுக்கு வாய்ப்பு * சச்சின், தோனி ஓய்வு

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் தேர்வு செய்யப்பட்டார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்ரிநாத், சகா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, வரும் மே 28ல் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. வரும் ஜூன் 4ல் ஒரு "டுவென்டி-20', ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்ய, நேற்று ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.
சச்சின் ஓய்வு:
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், கேப்டன் தோனி ஆகியோருக்கு "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். காயம் காரணமாக சேவக், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.
புதிய கேப்டன்:
தோனி ஓய்வு காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, 5-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளார். துணைக்கேப்டன் பொறுப்பு ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "ஆல் ரவுண்டர்' இடத்தை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.
பத்ரிநாத் அபாரம்:
"மிடில் ஆர்டருக்கு' பத்ரிநாத், ராயுடுவுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனுபவம் மற்றும் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் (922 ரன்கள்) அசத்தியதன் காரணமாக, வாய்ப்பு பத்ரிநாத்துக்கு சென்றது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், சகா ஆகியோர் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஸ்ரீசாந்த் "அவுட்':
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், உலக கோப்பை தொடரில் இடம் பெறாத பிரவீண் குமார், மீண்டும் வாய்ப்பு பெற்றார். இவருடன் வினய் குமார், முனாப் படேலும், டெக்கான் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றனர். அதேநேரம், தற்போதைய "டுவென்டி-20' தொடரில் ஏமாற்றி வரும் ஸ்ரீசாந்த், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மிஸ்ராவுக்கு வாய்ப்பு:
சுழல் பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஷ்வின் ஜோடியுடன் அமித் மிஸ்ரா இணைந்தார். உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பியுஸ் சாவ்லா, பஞ்சாப் அணியின் ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதேபோல, அதிரடி வல்தாட்டி, மனோஜ் திவாரிக்கும் ஏமாற்றமே கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" சீனியர்கள் இல்லாத நிலையில், சமபலத்துடன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
---
16 பேர் கொண்ட இந்திய அணி:
காம்பிர் (கேப்டன்), ரெய்னா (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts