background img

புதிய வரவு

சென்னையில் காரில் பிணம்: அரசு அதிகாரி எரித்து கொலை

அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. என்ஜினீயரான இவர் அரசு குடிசை மாற்று வாரியத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், தினேஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்கள்.

மாசிலாமணி சென்னையில் பல இடங்களில் கட்டிட பணிகளை செய்து வருகிறார். அடிக்கடி காரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிடுவார். இதற்காக சுரேஷ் (25) என்ற கார் டிரைவரையும் பணிக்கு வைத்திருந்தார். மூலக்கடை அருகேயுள்ள எருக்கஞ்சேரியில் மாசிலா மணி ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்து வந்தார். இந்த கட்டிட பணியை பார்வையிட நேற்று முன்தினம் அவர் காரில் எடுக்கஞ்சேரிக்கு சென்றார். அங்கு வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு கூலியும் கொடுத்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் வீடு வந்து சேர வில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் சென்று தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவரது சகோதரர் அனந்தநாராயணன் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கிண்டி தொழிற்பேட்டை அருகில் ஒரு கார் எரிந்த நிலையில் காணப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் ஒருவர் கரிக்கட்டையாக எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் பிணமாக கிடந்தது மாசிலாமணியாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாசிலாமணி காணாமல் போன அன்று காரில் ரூ. 4 1/2 லட்சம் பணம் இருந்தது. பணத்துக்காக மாசிலா மணியை டிரைவர் சுரேஷ் காருடன் எரித்து கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் தொழில் போட்டி காரணமாக மாசிலாமணி கொல்லப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. புளியந்தோப்பு துணை கமிஷனர் (பொறுப்பு) அபிஷேக் மாசிலாமணியின் மனைவி லலிதாவிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். டிரைவர் சுரேஷ் பற்றி அவரிடம் கேட்டபோது, கடந்த 1 1/2 மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்ததாகவும், அவர் யார் என்று தெரியாது. வேறு ஒருவர் அவரை பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து டிரைவர் சுரேசை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்று விசாரித்து அவரைப் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் மாசிலாமணி சென்னையில் பல கட்டிடங்களை கட்டி வருவதால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் வேலை பார்த்தனர். அவர்களில் யாராவது பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி மாசிலாமணியின் சகோதரர் அனந்தநாராயணன் கூறுகையில், எனது அண்ணன் மனைவி கர்நாடகாவில் உள்ள பங்காரு பேட்டைக்கு சென்றிருந்தார். அவரை அழைத்து வர அண்ணன் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் காருக்குள் பிணமாக கிடந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அண்ணியை அங்கிருந்து வரவழைத்தோம். புதிதாக வேலைக்கு சேர்ந்த டிரைவர் சுரேஷ் மீதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றார். இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறும்போது, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறோம். கொலை நடந்த இடத்தில் 4 தடயங்கள் சிக்கியுள்ளன. கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts