background img

புதிய வரவு

ஹெலிகாப்டர் விபத்தில் அருணாசல முதல்வர் மரணம்

இடாநகர் மே 4: அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு (56) சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது. அவர் உள்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேரும் மரணம் அடைந்தனர்.
இதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை உறுதி செய்தார். டோர்ஜி காண்டுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.
அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் கேலா, லுகுதாங்குக்கு இடைப்பட்ட மலைப் பிரதேசத்தில் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் கண்டறியப்பட்டன.
அந்த இடத்தில் 5 உடல்களும் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு உடலை டோர் ஜி காண்டுதான் என்று அவரது உறவினரும், பஞ்சாயத்துத் தலைவருமான துப்தன் என்பவர் அடையாளம் கண்டு கூறினார். மற்றொருவரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. பிற மூவரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை.
டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதும் கிராம மக்களின் உதவியும் கோரப்பட்டது. இதையடுத்து அவர்களும் முழுவீச்சில் தேடிவந்தனர். இந்நிலையில் தவாங் மாவட்டத்தின் மலைப் பகுதியில் சுமார் 4900 மீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டர் சிதைந்து கிடப்பதைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் கண்டறிந்தனர். இடாநகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ராணுவக் குழு விரைவு... பின்னர் இதுகுறித்து அருகில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் சிதைந்து கிடக்கும் இடத்தை ராணுவ வீரர்கள் சென்றடைய இன்னும் சில மணி நேரம் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை தவாங்கில் இருந்து இடாநகருக்கு பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவருடன் 2 விமானிகள் உள்பட 4 பேர் இருந்தனர். புறப்பட்ட 20 நிமிடங்களில் ஹெலிகாப்டர் அனைத்து தகவல் தொடர்பையும் இழந்தது.
இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதனிடையே, இஸ்ரோவின் உதவியும் நாடப்பட்டது. செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பியதில் இந்திய எல்லையை ஒட்டிய பூடான் பகுதியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கிடப்பது போல் தெரிந்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு ஐடிபிபி வீரர்கள் 300 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சொந்த வாழ்க்கை: டோர்ஜி காண்டு மோன்பா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். ராணுவத்தில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். வங்கதேசப் போரின் போது சிறப்பாகப் பணியாற்றியதற்கு தங்கப் பதக்கம் பெற்றவர். பணி ஓய்வுக்குப் பின்னர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார். அருணாசலப் பிரதேசத்தின் 6-வது முதல்வர். இப்போது 2-வது தடவையாக முதல்வர் பதவி வகித்தார். இவருக்கு 2 மனைவிகள். 4 மகன்கள். 2 மகள்கள் உள்ளனர்.
வேதனையாக உள்ளது...
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டோர்ஜி காண்டுவின் ஹெலிகாப்டர் மாயமாகி சில தினங்கள் ஆனாலும் அவர் உயிருடன் இருப்பார் என்று நம்பி வந்தோம். அவரை மீட்க பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சித்தோம். இந்நிலையில் தவாங் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சிதறிக்கிடப்பதை கிராம மக்கள் கண்டறிந்துள்ளனர். அங்கு கிடந்த உடலை டோர்ஜி காண்டுதான் என்று அவரது உறவினர் அடையாளம் காட்டியுள்ளார். அந்த இடத்துக்கு ராணுவம் விரைந்துள்ளது. இந்த செய்தி வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
விபத்தில் சிக்கியதா?
டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதா? அல்லது மோசமான வானிலை காரணமாக மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானதா? அல்லது சதி வேலையா என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
சொந்த கிராமத்தில் அடக்கம்
இடாநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் பி.கே.ஹண்டிக், ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடத்தில் 5 உடல்களும் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அடர்ந்த வனப் பகுதியாக இருப்பதால் உடல்களை அங்கிருந்து கொண்டுவருவது சிரமமாக இருக்கும். இதில் தாமதமும் ஏற்படலாம்.
ஆனால் டோர்ஜியின் உடல் எப்படியும் இடாநகருக்கு கொண்டுவந்து பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் தவாங் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான கியாங்கருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் என்றார்.
அடுத்த முதல்வர் யார்?
முதல்வர் டோர்ஜி காண்டு மரணம் அடைந்துள்ளதால், அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹண்டிக்கிடம் கேட்டதற்கு, அடுத்த முதல்வர் யார் என்று இப்போது சொல்ல முடியாது.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும்.
இப்போது மாநிலத்தின் அரசியல் சூழலை மத்திய அமைச்சர்கள் நாராயணசாமியும், முகுல் வாஸ்னிக்கும் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்றார் ஹண்டிக்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts