background img

புதிய வரவு

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை!

இஸ்லாமாபாத், மே 5: ஒசாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு அமெரிக்கக் கடற்படையின் கமாண்டோக்கள் தாக்குதல் நடத்திக் கொன்றனர் என்பதற்காக வேறு எந்த நாடாவது அப்படிப்பட்ட கற்பனைகளில் மிதந்தால் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் ராணுவம் தக்க பாடம் கற்பிக்கும் என்று பாகிஸ்தான் ராணுவத்துறை செயலாளர் சல்மான் பஷீர் எச்சரித்திருக்கிறார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகில் உள்ள அபோட்டாபாத் பகுதியில் ஹெலிகாப்டர்களில் இறங்கி தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை, பாகிஸ்தானின் ராணுவத்துக்குத் தகவல் தெரிவித்திருந்தால் அது எப்படியாவது உடனே ஐ.எஸ்.ஐ.க்குப் போய்ச் சேரும், அதன் பிறகு பின் லேடனை உயிருடன் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது என்ற லட்சியம் நிறைவேறி இருக்காது என்று அமெரிக்கா கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இரட்டை அவமானம் நேர்ந்திருக்கிறது. தன்னுடைய நாட்டின் தலைநகரம் அருகே, ராணுவப் பயிற்சி நிலையம் இருக்கும் ஊரிலே வேற்று நாட்டைச் சேர்ந்த கமாண்டோக்கள் தங்களிடம் அனுமதி வாங்காமலேயே வந்து இறங்கவும் சந்தேகப்பட்ட நபரைக் கொல்லவும் அவருடைய சடலத்தையும் கொண்டு செல்லவும் முடிகிறது, அதைத் தடுக்கவோ, மறிக்கவோ, கேள்வி கேட்கவோ பாகிஸ்தானுக்கு வழி இல்லை என்பது முதலாவது அவமானம்.
உலகம் முழுக்க இத்தனை நாள்களாகத் தேடிக்கொண்டிருக்கும் சர்வதேச குற்றவாளி, மனித குலத்துக்கு எதிராக சதி செய்து அதை நிறைவேற்றிய பயங்கரவாதி, அப்பாவிகளின் உயிர்களை அன்றாடம் பலி வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய மனிதருக்கு பாகிஸ்தான் நாடு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தது என்பது இரண்டாவது அவமானம்.
பின் லேடன் தன்னுடைய நாட்டில் மறைந்து வாழ்ந்தார், அவர் அங்கு குடியிருந்ததே தெரியாது என்றால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துறையே ஒட்டுமொத்தமாக தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம். இல்லையில்லை, எங்களுக்குத் தெரிந்துதான் பின் லேடன் அங்கே குடியிருந்தார் என்று சொன்னால் பயங்கரவாதத்துக்குத் துணை போகும் நாடு என்று இந்தியா கூறுவது உண்மைதான் என்று எல்லா நாடுகளும் ஆமோதித்துவிடும். எனவே இந்த விவகாரத்தில் எதைப்பேசினாலும் ஆபத்து, அவமானம் என்பதால் பாகிஸ்தான் தன்னுடைய பாணியில் தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தை மறைத்து, இல்லாத வீரப் பிரதாபங்களைக் கொட்டி அளந்துள்ளது. அதைத்தான் சல்மான் பஷீர் பேட்டியாக கக்கியிருக்கிறார்.
"அமெரிக்காவைப் போலவே தங்களாலும் தாக்குதல் நடத்த முடியும் என்று ஒரு நாட்டின் (இந்தியா) ராணுவ அதிகாரிகள் (விமானப்படை, தரைப்படை தலைமை தளபதிகள்) பேட்டி அளித்திருப்பதைப் பார்த்தால் நகைப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் சாதாரணமானதல்ல. எந்த எதிரியும் உள்ளே நுழைந்துவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. எப்போதும் விழிப்புடன் இருப்பது.
அபோட்டாபாத் நகரில் அமெரிக்கக் கமாண்டோ நடத்திய சாகசங்களை ஏன் குறை கூறுகிறோம் என்றால், பக்கத்திலேயே எங்கள் ராணுவப் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது, அங்கிருப்பவர்கள் தப்பித்தவறி பதில் நடவடிக்கையில் இறங்கியிருந்தால் அமெரிக்கக் கமாண்டோக்களின் கதி என்னவாகியிருக்கும் என்ற கவலையில்தான், எங்களிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்று கூறினோம்.
யார் வேண்டுமானாலும் பாகிஸ்தானில் நுழையலாம், யாரை வேண்டுமானாலும் கொன்றுவிட்டுப் போகலாம் என்று எந்த நாடும் (குறிப்பாக இந்தியா) கருதிவிடக் கூடாது என்று சல்மான் பஷீர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானில் பின் லேடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடனேயே அவரை உயிருடன் பிடித்துவர வேண்டும் இல்லாவிட்டால் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து அதை நிறைவேற்றினோம், அதை பாகிஸ்தானிடம் எதற்காக முன் கூட்டியே தெரிவிக்கவேண்டும் என்றுதான் தெரிவிக்கவில்லை என்றுஅமெரிக்க ராணுவம் பலமுறை கூறிவிட்டது. பாகிஸ்தானை அமெரிக்கா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று இதிலிருந்து புலனாகிறது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீள வழி தெரியாத பாகிஸ்தான், இந்தியா மீது மறைமுகமாக வசைபாடியிருக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts