background img

புதிய வரவு

எங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி

`2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர்.


அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்.

நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.

`2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது.


அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; ``யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது'' என்றார்.


கைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு; ``சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்று பதில் அளித்தார்.


``இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்'' என்றும் அவர் கூறினார்.


குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா? என்று கேட்கப்பட்டது.


அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்" என்றார்.


இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு, ``எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை.


கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார்.


எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts