background img

புதிய வரவு

ஆடம்பரம், படாடோபம் கூடாது-அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஜெ உத்தரவு

சென்னை: தேர்தலில் வென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கச் செல்லும் போது, பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிவுடன் கேட்டறிந்து, அவற்றை தீர்த்து வைக்கும் வகையில் உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.கவின் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து பேராதரவு வழங்கி உள்ளனர். மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், வெற்றி வாய்ப்பு இழந்த கழக வேட்பாளர்களும், அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லும் போது எந்தவித ஆடம்பரமும், படாடோபமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; நன்றி தெரிவிக்கும் பணி எளிமையாக நடைபெற வேண்டும். மேடைகள் அமைத்தோ, பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்தோ நன்றி சொல்லும் பணியை மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி வட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் நேரிடையாகச் சென்று மக்களைச் சந்தித்து, அ.தி.மு.கவின் மீது மாபெரும் நம்பிக்கை வைத்து, மகத்தான வெற்றியை அளித்தமைக்கு அன்புடன் நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கச் செல்லும்போது, அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உட்பட்ட கிராமங்களுக்கும், நகர மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும், மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்களுக்கும், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்க வரும் போது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கச் செல்லும் போது, பொது மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிவுடன் கேட்டறிந்து, அவற்றை தீர்த்து வைக்கும் வகையில் உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும்-செல்வி ராமஜெயம்:

இந் நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் இன்று நிருபர்களிடம் பேசுகையில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை அம்மா கொடுத்திருப்பதற்கு காலமெல்லாம் நன்றிச்ச சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 10 வருடமாக டவுன் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினேன். இப்போது முதல்வர் எனக்கு அதை விட முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதற்கு நான் தகுதி உள்ளவராக செயலாற்றுவேன்.

3வது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். பின்தங்கிய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

படித்த, ஏழை பெண்கள், பட்டதாரி, டிப்ளமோ படித்த பெண்கள் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.சத்துணவு, அங்கன்வாடி ஊட்டச்சத்து துறை பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கவும், பின்னர் காப்பகங்களில் பராமரித்து வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு தேவையானவற்றை செய்து மேம்படுத்தப்படும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts