background img

புதிய வரவு

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: கோட்டையில் இன்று நடைபெறுகிறது

அதிமுக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கோட்டை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கான அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது.

14-வது சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஏழு திட்டங்களுக்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

பட்டதாரி ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவியை ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும், அரை சவரன் தங்கம் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார். 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இலவச அரிசி திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. சில திட்டங்கள் அடுத்த 10 நாள்களுக்குள் அமல்படுத்தப்பட இருப்பதால் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டாவது நாளிலேயே அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனை நடத்தினார் ஜெயலலிதா. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கூட்டம் நடைபெற்றது. இதேபோன்று, மூன்றாவது நாளும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் என்ன, அதன் தன்மைகள், கோப்புகளை எவ்வாறு கையாள்வது என்பன உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறினார் ஜெயலலிதா.

புதியவர்களுக்கு முதல் கூட்டம்: தமிழக அமைச்சரவையில் 24 பேர் புதியவர்கள். அவர்களுக்கு இது முதல் அமைச்சரவைக் கூட்டமாகும். ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் என்பதால் சனிக்கிழமை பணி இல்லாவிட்டாலும் பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திலேயே முகாமிட்டு இருந்தனர். துறைகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த அவர்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கேள்விகளைக் கேட்டால் அதற்கு தங்களை தயார் செய்யும் வகையில் பணியாற்றியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts