background img

புதிய வரவு

நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்பேன்: கனிமொழி

புது தில்லி, மே 5 : 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடப்பேன் என்று கனிமொழி கூறினார்.
2ஜி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகிறார். இதற்காக அவர் தில்லி வந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், தமிழக அமைச்சர் பூங்கோதை, உள்துறைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர் புதன் இரவு தில்லிக்கு வந்தனர்.
வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பாக வியாழன் இரவு நிருபர்களைச் சந்தித்தார் கனிமொழி.
இவ்வழக்கை சட்ட ரீதியில் எதிர்கொள்ள வேண்டிய முறை குறித்து கடந்த இரு தினங்களாக சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு கனிமொழி அளித்த பேட்டி:
கேள்வி: சி.பி.ஐ. நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
கனி: நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும் நான் மதித்து நடப்பேன். நிரபராதி என்பதை நிருபித்து வெளியே வருவேன். நீதிமன்றத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் யூகித்துக் கூற முடியாது. நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.
கேள்வி: நீங்கள் பெண் என்பதால் உங்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
கனி: நான் எப்போதும் ஆணும், பெண்ணும் சமம் என கருதுபவள். எனவே பெண் என்பதற்காக எந்தச் சலுகையையும் காட்டக்கூடாது எனக் கருதுகிறேன்.
கேள்வி: நீதிமன்ற விசாரணையின்போது கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
கனி: இதுவரை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை.
கேள்வி: இந்த விவகாரத்தில் உங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லை எனக் கருதுகிறீர்களா?
கனி: அப்படி இல்லை. நாங்கள் எந்த அரசியல் கட்சியின் ஆதரவையும் கோரவில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வாழ்க்கை நாங்கள் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.
கேள்வி: தில்லியில் உங்களுக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள்? இந்த விவகாரம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
கனி: எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடன் எனது தாயார், சகோதரர் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.
கேள்வி: இந்த விவகாரத்தை கட்சிக்குப் பின்னடைவாகந்க் கருதுகிறீர்களா?
கனி: இதுபோன்ற ஏராளமான சோதனைகளை திமுக சந்தித்துள்ளது. சோதனைகளைச் சந்தித்து மீண்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: நீதிமன்ற முடிவு என்னவாக இருக்கும் எனக் கருதுகிறீர்கள்?
கனி: யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற நான் ஊடகம் கிடையாது.
கேள்வி: குற்றப்பத்திரிகை விவகாரத்தால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
கனி: இந்த விவகாரம் தொடர்பாக கட்சி மட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை இதில் எந்தப் பிரிவினையையும் நான் பார்க்கவில்லை.
கேள்வி: நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு ஆஜராகப் போகிறீர்கள்?
கனி: காலை 10 மணிக்கு ஆஜராக உள்ளேன்.
கேள்வி: இந்த விவகாரத்தில் திமுக மட்டும் குறி வைத்து தாக்கப்படுவதாகக் கருதுகிறீர்களா?
கனி: மூத்த பத்திரிக்கையாளர்களான உங்களுக்கே தெரியும்.
ஜேட்மலானி ஆஜர்: இந்த வழக்கில் கனிமொழியின் சார்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜேட்மலானி, அல்டாஃப் அகமது ஆகியோர் ஆஜராக இருப்பதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக வியாழன் காலையில் சில தனியார் தொலைக்காட்சிகளுக்கு தனது இல்லத்தில் பேட்டி அளித்தார். பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பினார். அங்கு திமுகவின் மத்திய இணை அமைச்சர்கள் பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன் ஆகியோர் கனிமொழியை மதியம் சந்தித்துச் சென்றனர். மாலையில் நிருபர்களைச் சந்தித்தார்.
முதல்வர் தில்லி வருகை இல்லை: கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும் சமயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வருவார் எனக் கூறப்பட்டது. செம்மொழி விருது வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை ஒட்டி அவர் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராவதால் தில்லிக்கு வருவதை முதல்வர் கருணாநிதி தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அழகிரி யோசனை கூறியதாகத் தெரியவருகிறது.
நிருபர்களைச் சந்தித்த பிறகு அமைச்சர் பூங்கோதையுடன் காரில் ஏறி வெளியே செல்ல முற்பட்டார் கனிமொழி. அப்போது திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் கனிமொழியைச் சந்தித்தார். பின்னர் காரில் ஏறி வெளியே சென்றார். கனிமொழி சென்ற ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவரது கணவர் அரவிந்த் அவரைத் தொடர்ந்து மற்றொரு காரில் ஏறிச் சென்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts