background img

புதிய வரவு

தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை முறைப்படுத்த வேண்டும்: கருணாநிதி

சென்னை:"தேர்தல் கமிஷன் கடிவாளமின்றி ஓடுவதை, அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, அதன் அதிகாரங்ளை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும்' என, முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை சம்பந்தமாக, பா.ஜ.,வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்தது. இக்குழுவின் அறிக்கை, பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளியானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை, இன்னும் முடிவுக்கு வரவில்லை. 21 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவின், 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்துவிட்டனர்.எனினும், முரளி மனோகர் ஜோஷி, அறிக்கையை லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஜோஷி வகித்த பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவி, கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அவருக்கு பிறகு, அவரது கட்சிக்காரர் தான் அப்பொறுப்புக்கு வருவார் என்ற நடைமுறைப்படி, முரளி மனோகர் ஜோஷியையே மீண்டும் தலைவராக நியமித்து சபாநாயகர் மீராகுமார் அறிவித்துள்ளார்.

ஜோஷி அனுப்பிய அறிக்கை குறித்து, பல்வேறு சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. குழுவின் வரைவு அறிக்கையின் நகல், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மீது பத்திவாரியாக உறுப்பினர்கள் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அறிக்கை மீது பார்லிமென்டில் விவாதம் நடந்து, அதை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பினர்களை பொறுத்ததாகும்.இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, பார்லிமென்ட் நடைமுறைகளைப் பின்பற்றுவதை விட, அறிக்கையை வேகமாக தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.சட்டசபை தேர்தல் நடந்த, ஐந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதிகளை தேர்தல் கமிஷன் கடைபிடித்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் விவாதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். இவரின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. தமிழகத்தில் தேர்தல் கமிஷன் கடைபிடித்த விதிமுறைகளை அனைவரும் அறிவர்.

தேர்தல் கமிஷன் அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டது. விருப்பு வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு.இந்நிலையில், மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியது போல, தேர்தல் கமிஷன் மாநிலத்திற்கு ஒரு அளவுகோலை கடைபிடிக்கக் கூடாது. தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இடையே வேறுபாடு இருக்க முடியாது. எனவே, தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பார்லிமென்டில் விவாதிப்பதுடன், அதன் அதிகாரங்களை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும்.கேரளாவில், 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி, நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளதை பாராட்டுகிறேன். அரசின் சலுகைகளை பெற குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேர்ச்சி அவசியம் என்பது, அவருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts