background img

புதிய வரவு

பிறர் மீது சேறு வாரி இறைப்பதில் ஜெ. கை தேர்ந்தவர்-கருணாநிதி

சென்னை: எந்த பிரச்சினையை பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப்போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப்போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பத்தில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி 2ஜி பிரச்சினையிலிருந்து திமுக வெற்றிகரமாக வெளி வரும் என்று முதல்வர் கருணா நிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: 2ஜி அலைக்கற்றை பிரச்சினை சம்பந்தமாக கழகத்தின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம் போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?.

பதில்: எந்த பிரச்சினையை பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப்போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப்போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பத்தில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப்பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்-``பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டதாக கூறுவதுபோல, அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்'' என்றும்; ``தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையை பெரிதுபடுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன'' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக்கூற இயலவில்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப்படையிலேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப் படுத்தினார்; வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஷோரி வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ., 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது.

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பா.ஜ.க.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியோ ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு வரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி ``கருத்தியலான'' ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில்- கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத்தூணாக்கும் நடவடிக்கை யில்-இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடுகளும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்த பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றில் இருந்து உதாரணம் ஒன்றை காட்டட்டுமா?. இன்றைய ``தி நிï இன்டியன் எக்ஸ்பிரஸ்'' ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், ``பெரியதொரு குடும்பம் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப்போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக்கிறது'' என்று எழுதியிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிட தேவையில்லை. இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளை தாண்டும்போது, அரசியல் சதுரங்கம்-ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்?. மனசாட்சியை தொட்டுப்பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்கமும், நச்சு எண்ணமும் நன்றாக புரியுமே.

கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ``சன் டி.வி.''யில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவீத உரிமையை முழுவதுமாக விட்டு கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங்களை எல்லாம் 2008-ம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத்தாருக்கு பிரித்துக்கொடுத்ததையும் விவரமாக குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராக கற்பனை செய்து கொண்டு, நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1-7-1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30-4-1996-ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய். ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக்காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப்பகுதி முக்கியமானது. ``இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக்குழு தீர்மானித்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது'' என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. கழகம், ஜெயலலிதாவைப்போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்தில் இருந்தும் நிச்சயமாக வெளியே வரும்.

கேள்வி: தமிழ்நாட்டில் மின்வெட்டை பற்றி தொடர்ந்து ஏடுகள் எழுதுகின்றனவே?.

பதில்: மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்.

நேற்று முன்தினம்கூட நாளேடுகளில் செய்தி ஒன்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் நிர்வாகம் நடைபெற்று வருவதாக சொல்லப்படும் பீகார் மாநிலத்தில்கூட, மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் பனிரெண்டுக்கும் மேலான நகரங்களில் மின்தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து குழப்பமான நிலைமை ஏற்பட்டு வருகிறது. ``பல நாட்களாக மின்சார விநியோகமே இல்லை; எங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்று பொதுமக்கள் கூக்குரல் எழுப்பும் அளவுக்கு பீகாரில் மின்தட்டுப்பாடு.

தமிழகத்தை பொறுத்தவரை இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும். தமிழகத்தில், 2011-2012-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 224 மெகாவாட்டும், 2012-2013-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 517 மெகாவாட்டும், 2013-2014-ம் ஆண்டில் 16 ஆயிரத்து 927 மெகாவாட்டும் மின் தேவை இருக்குமென மத்திய மின்துறை ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்படி வளரும் மின் தேவையை கருத்திலே கொண்டு, மின்உற்பத்தி திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் இன்றைய அரசு உறுதியளித்துள்ளது.

கேள்வி: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே?.

பதில்: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சம்பந்தமாக 2010-ம் ஆண்டிலேயே என்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறேன். 25-1-2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``மாண்புமிகு தமிழக முதல்- அமைச்சர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் `பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தலைவர் ஆர்.செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை ரோகிணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு தலைவர் ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் சங்கீதா, ராம் ஆகியோர் சந்தித்து, மரபணு மாற்று கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

அவர்களின் மனுவினை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் கலைஞர் அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத் துறை அமைச்சர் இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கமாக கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன்-எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்'' என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts