background img

புதிய வரவு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் முறையே தொடரும்-கருணாநிதி

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை வைத்தே இந்த கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் புதிய நெறிமுறைகள் பின்பற்றப்படுமானால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு சமூக நீதியைக் காத்திடும் நோக்கிலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் பொறியியல் கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ்நாடு பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக பொதுப் பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 சதவீத மதிப்பெண்களும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு 35 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயம் செய்து, அது தொடர்பான ஆணைகளை வெளியிட்டு, கடந்த 2010-2011ம் கல்வியாண்டு முதல் இந்நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந் நிலையில், தற்பொழுது அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் 2011-2012ம் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய நெறிமுறைகளை வரையறுத்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் இந்தப் புதிய நெறிமுறைகள் பின்பற்றப்படுமானால், பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும்.

தற்போது தமிழக அரசால் 2010-2011ம் ஆண்டு முதல், பல்வேறு பிரிவினைச் சார்ந்த மாணவ, மாணவியர்க்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள்- சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்களையே, வரும் கல்வியாண்டிற்கான (2011-2012) மாணவர் சேர்க்கைக்குப் பின்பற்றலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆகவே, கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டாமல், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் இந்த ஆணையினை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts