background img

புதிய வரவு

குண்டுவீச்சில் கடாபி மகன், பேரக்குழந்தைகள் பலி : கடாபி தப்பினார்: லிபியாவில் பரபரப்பு

டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை, பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பு நம்ப மறுத்துவிட்டது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியின் படை தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, "நேட்டோ' விமானப் படைகள், கடாபியின் முக்கிய ராணுவ மையங்களின் மீது குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, கடாபி மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் குடியிருக்கும் "பாப் அல் அஜீசியா' வளாகத்தின் மீது, "நேட்டோ' விமானப் படைகள் குண்டுகளை வீசி தாக்கின. இச்சம்பவத்தில், கடாபியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தின் மீது குண்டுகள் விழுந்தன. அதன் சத்தம், டிரிபோலியின் பல பகுதிகளில் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகன்,பேரக் குழந்தைகள் பலி: அப்போது, அக்கட்டடத்தின் உள்ளே இருந்த கடாபியின் இளைய மகன் சயீப் அல் அரப்(29) என்பவரும், கடாபியின் பேரக் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகினர். இவர்கள் மூவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள்.
இதுகுறித்து லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் கூறியதாவது: அக்கட்டடத்தின் மீது மூன்று ஏவுகணைகள் விழுந்துள்ளன. தாக்குதல் நடந்த போது கட்டடத்தின் உள்பகுதியில் கடாபி, அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், சயீப் அல் அரப், மூன்று பேரக் குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.
சயீப் அல் அரப், அப்போது தனது தந்தையுடன் பேசிக் கொண்டும், அக்குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தார். குண்டு வீச்சில் அவரும், குழந்தைகளும் பலியாகினர். கடாபி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மற்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதிலிருந்து, லிபியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொள்ளட்டும். இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் லிபிய மக்களை எப்படி காக்க முடியும்? கடாபியின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது.
"நேட்டோ' மற்றும் சர்வதேச நாடுகள் லிபியாவில் அமைதியை விரும்பாமல், தாக்குதல் நடத்தி வருகின்றன. அவர்களின் நோக்கம், லிபிய எண்ணெய் வளத்தை சூறையாடுவது தான். பேச்சுவார்த்தை, தேர்தல், அரசியல் சாசன முன்வரைவு என எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் எங்கள் குரலுக்குச் செவிசாய்க்காமல், எங்களைக் கொள்ளையடிக்கின்றன. இவ்வாறு மூசா இப்ராகிம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த இடத்தை, பத்திரிகையாளர்கள் அனைவரும் நேரில் பார்த்து ஆய்வு செய்ய, லிபிய அரசு ஏற்பாடு செய்தது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நேட்டோ' ஒப்புதல்: இதுகுறித்து "நேட்டோ'வின் லிபியத் தாக்குதலுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடாபியின் குடியிப்பு மீது "நேட்டோ' தாக்குதல் நடத்தியது. ஆனால் அது தனிப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அல்ல. அக்கட்டடம், கடாபி ராணுவத்தின் கட்டுப்பாட்டு மையம் என்பதால் குண்டு வீசப்பட்டது. ஐ.நா., தீர்மானத்தின்படி, கடாபியின் ராணுவ மையங்கள் "நேட்டோ'வால் தாக்கப்பட்டு வருகின்றன. இத்தாக்குதலில் கடாபியின் உறவினர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக வருந்துகிறோம். இவ்வாறு பவுச்சார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இதுபோன்ற தாக்குதல்களுக்காக "நேட்டோ' அறிக்கை எதுவும் வெளியிடாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே "நேட்டோ' அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்த்தரப்பு நம்ப மறுப்பு: கடாபியின் மகன் மற்றும் பேரக் குழந்தைகள் பலியானதை, வேறு தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பெங்காசியில் உள்ள எதிர்த்தரப்பினர், இத்தகவலை நம்ப மறுத்து விட்டனர். இதுகுறித்து தேசிய இடைக்கால கவுன்சில் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபேஸ் கோகா கூறியதாவது: இதுபோன்ற தகவல்களைப் பரப்பி தன் மீது அனுதாபம் வரவழைப்பது கடாபியின் வாடிக்கை. 1986ல் ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த போது, டிரிபோலி மீது அமெரிக்க விமானப் படைகள் நடத்திய தாக்குதலில், கடாபியின் தத்துப் பெண் குழந்தை பலியானதாக செய்திகள் வெளியாகின.
தாக்குதல் நடந்த இடத்தை செய்தியாளர்கள் தோண்டிப் பார்த்த போது, ஒரு குழந்தையின் சடலம் கிடைத்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கும் கடாபிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர், தன் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக, அக்குழந்தையைத் தத்து எடுத்திருப்பதாக அறிவித்துக் கொண்டார். இவ்வாறு கோகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், தான் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக, கடாபி தன் குடியிருப்பில் இருந்து பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள "டிவி' நிலையம் ஒன்றின் கட்டடம் மீது "நேட்டோ' விமானப் படைகள் குண்டு வீசித் தாக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு பிள்ளைகளின் அப்பா கடாபி : கடாபிக்கு இரு மனைவிகள். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி சபியா பர்காஸ் மூலம் கடாபிக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு பேரில், ஆயிஷா கடாபி மட்டும் பெண் குழந்தை. முகமது, சயீப் அல் இஸ்லாம், அல் சாடி, ஹனிபால், பிலால், சயீப் அல் அரப், கமீஸ், ஆகியோர் பிற குழந்தைகள்.
மிலாட் என்பவரையும், ஹன்னா என்ற பெண் குழந்தையையும் கடாபி தத்தெடுத்தார். 1986ல், கடாபி வீட்டின் மீது நடந்த தாக்குதலில் ஹன்னா இறந்து போனதாக தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் எதிர்த்தரப்பினர் நடத்திய தாக்குதலில், கமீஸ் பலியானதாகவும் தகவல் வந்தது. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் இயங்கும் ராணுவம் தான் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது.
சயீப் அல் அரப் ஜெர்மனியில் படித்து வந்தார். சமீபத்தில் தான் நாடு திரும்பினார். அரசியல் வாழ்வில் அவர் ஈடுபடாததால், அவரது புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts