background img

புதிய வரவு

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - ஆர்.ரங்கராஜ் பாண்டே -

திரும்பிய இடமெல்லாம் ஒரே பேச்சு தான். தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா? அரியணை ஏறிவிடுவாரா ஜெயலலிதா? பல விதங்களில் கேட்கப்பட்டாலும், கேள்வியின் உட்கருத்து ஒன்று தான்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்பது தான் அது. ஓட்டு போட்டுவிட்டு ஒரு மாதம் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது, தமிழக வாக்காளர்களுக்கு புதிய அனுபவம். போதாத குறைக்கு, "10ம் தேதி மாலை 5 மணி வரை எந்த கருத்துக் கணிப்பையும் வெளியிடக் கூடாது' என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுவிட்டது. என்ன தான் செய்யும் பொதுஜனம்? யாரைச் சந்தித்தாலும், "என்னண்ணே! அம்மா திரும்ப வந்துடுவாங்களா? தலைவர் தப்பிச்சுடுவாரா?' என்றே கேட்டுக்கொண்டிருந்தனர். இதற்கான பதில், மே 13ம் தேதி நண்பகல் ஒரு மணிக்கு நிச்சயமாகத் தெரிந்துவிடும். இருந்தாலும், உலகுக்கு எல்லாம் தெரியும் முன்னரே, ஒரு விஷயம் தனக்குத் தெரிந்துவிட வேண்டும் என்ற ஆர்வம், அத்தனை பேருக்கும் உண்டு. அவர்களின் ஆவலைத் தீர்க்கும் முயற்சி இது. தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது அ.தி.மு.க., அடுத்த முதல்வராக வரப்போகிறவர் ஜெயலலிதா. எப்படி? தமிழகத்தில், 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 40க்கு 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது. அப்போதே தெரிந்துவிட்டது, அ.தி.மு.க., ஆட்சி வீட்டுக்குப் போகப்போகிறது என்று. ஆனால், அதிருப்தி அலையைத் துடைத்துவிட வேண்டும் என, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, ஆட்சியைப் பறிகொடுத்தாலும் - தமிழக வரலாற்றில் இல்லாத அளவு - மிக வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. தி.மு.க., கூட்டணி 163 தொகுதிகளைப் பெற்றது; அ.தி.மு.க., கூட்டணி 69 தொகுதிகளில் வென்றது.

அடுத்து நடந்த லோக்சபா தேர்தலில், 2004ல் இழந்த 40ல், 12 தொகுதிகளை அ.தி.மு.க., கூட்டணி மீட்டுவிட்டது. தி.மு.க., கூட்டணி, 28 தொகுதிகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. இந்த இரண்டு தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டாலே, மே 13ம் தேதி முடிவையும் கணித்துவிட முடியும். கடந்த 2006 சட்டசபைத் தேர்தலிலேயே 69 தொகுதிகளைக் கைப்பற்றியது அ.தி.மு.க., கூட்டணி. இத்தனைக்கும் அப்போது அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க.,வும், விடுதலைச் சிறுத்தைகளும் மட்டும் தான் இருந்தன. தி.மு.க., கூட்டணியோ, காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள் என வலுவான அணியாக இருந்தது.

2001 தேர்தலை ஒப்பிடுகையில், தி.மு.க., 4.52 சதவீத ஓட்டு வங்கியை இழந்திருந்தது. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை 2001ஐ விட 1.08 சதவீதம் கூடுதலாக ஓட்டு பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில், 2006 கூட்டணி, கிட்டத்தட்ட அப்படியே தான் இருக்கிறது. கம்யூனிஸ்ட்களும், விடுதலைச் சிறுத்தைகளும் மட்டும் இடம் மாறியிருக்கின்றனர். வி.சி.,க்களை விட காம்ரேட்களுக்கு ஓட்டு வீதம் அதிகம் என்பது என் கணிப்பு. சமம் தான் எனக் கொண்டால் கூட, 2006 கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது. அதது அப்படியே இருந்தால் கூட, இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் அ.தி.மு.க., கூட்டணி 90 தொகுதிகளைக் கைப்பற்றும். ஆனால், மிகப் பெரிய பலமாக, 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தே.மு.தி.க., இம்முறை அ.தி.மு.க., அணியில் இணைந்திருக்கிறது. இவர்கள் சேர்ந்ததன் மூலம், குறைந்தபட்சம் 150 தொகுதிகளை அ.தி.மு.க., அணி கைப்பற்றியே ஆகவேண்டும்.

2006ம் ஆண்டு, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தே.மு.தி.க., 10 ஆயிரம் ஓட்டுக்கும் அதிகமாக வாங்கியிருந்தது. வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்குமான வித்தியாசம், 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கு கீழ் தான் இருந்தது. அ.தி.மு.க., அணியில் இணைந்ததன் மூலம், மாற்று சக்தியாகத் திகழும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியில் பாதிக்குப் பாதி இழந்துவிட்டது எனக் கொண்டால் கூட, 50 தொகுதிகளில் மட்டும் தான் அ.தி.மு.க., அணிக்கு லாபம் கிடைக்கும் எனக் கொண்டால் கூட, 140 தொகுதிகளை அ.தி.மு.க., அணி கைப்பற்றியாக வேண்டும். அப்படியே 2009 லோக்சபா தேர்தலுக்கு வருவோம். 2004ல் 40க்கு 40ஐயும் பறிகொடுத்த அ.தி.மு.க., அணி, 2009ல் 12 தொகுதிகளில் வென்றது. ஒரு லோக்சபா தொகுதிக்கு, சராசரியாக ஆறு சட்டசபை தொகுதிகள் எனக் கொண்டால், 72 சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., அணி வெல்லும். முன்னர் சொன்ன கணக்குப்படி, தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கியையும் சேர்த்தால், இம்முறை 120 தொகுதிக்கு குறையாமல் அ.தி.மு.க., அணி வெல்லும். இவை வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு தான்.

இவை எல்லாவற்றையும் விட, கையைச் சுடும் விலைவாசி உயர்வு, கண்ணாமூச்சி காட்டும் மின்வெட்டு, அள்ள அள்ளக் குறையாத ஊழல், எல்லா துறைகளிலும் முதல் குடும்பத்தின் ஆதிக்கம் என, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, கடுமையாக வீசுகிறது. ஆக, தி.மு.க., ஆட்சி போய், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தே தீரும் என்பது தான் நிதர்சனம். எல்லா கணிப்புகளும், கணக்குகளும் தப்பாகி, தி.மு.க.,வுக்குச் சாதகமாக மவுனப் புரட்சியே ஏற்பட்டிருந்தால் கூட, அ.தி.மு.க., மைனாரிட்டி ஆட்சியாவது அமைக்குமே தவிர, தி.மு.க., ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மே 13ல் மீண்டும் சந்திப்போம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts