background img

புதிய வரவு

பிளஸ் 2 தேர்வில் 86% பேர் தேர்ச்சி: ஒசூர் மாணவி ரேகா முதலிடம்....

சென்னை, மே 9: பிளஸ் 2 தேர்வில் ஒசூரைச் சேர்ந்த மாணவி கே.ரேகா 1,200-க்கு 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வு எழுதிய மாணவர்களில் 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.7 சதவீதம் மட்டுமே அதிகம்.
ஒசூரிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவியான ரேகா, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் தலா 195 மதிப்பெண்ணும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 200-க்கு 200 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் எஸ்.வேல்முருகன் 1,187 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே இரண்டாமிடத்தையும், திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி வித்யா சகுந்தலா, பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவர் ரகுநாத், நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி சிந்துகவி, ஒசூரைச் சேர்ந்த மாணவி பி.எஸ்.ரேகா ஆகிய 4 பேர் தலா 1,186 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த முறை மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அனைவரும் சென்னை அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாடமாக தமிழ் அல்லாமல் வேறுமொழியைத் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவியரில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த கே.சந்தியா 1,191 மதிப்பெண் பெற்றுள்ளார். சம்ஸ்கிருதத்தை முதல் பாடமாக தேர்வு செய்ததால் இவருக்கு மாநில அளவிலான ரேங்க் கிடைக்கவில்லை.
தியாகராய நகர் வித்யோதயா பள்ளி மாணவி ஜெயப்பிரதா 1,190 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரும் முதல் பாடமாக பிரெஞ்ச் மொழியை தேர்வு செய்ததால் மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெறவில்லை.
6.15 லட்சம் பேர் தேர்ச்சி: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் (85.9%) தேர்ச்சியடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 802 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
மாணவியர் 89 சதவீத தேர்ச்சியும், மாணவர்கள் 82.3 சதவீத தேர்ச்சியும் அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 0.7 சதவீதம் அதிகம் ஆகும். தேர்ச்சியடைந்தவர்களில் 4,18,846 மாணவ, மாணவியர் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
200-க்கு 200 அதிகரிப்பு: பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு உதவும் கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதைத் தவிர்த்து பிற பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வணிகவியல் பாடத்தில் 1,167 பேரும், கணக்குப் பதிவியலில் 1,320 பேரும், தொழில் கணிதப் பாடத்தில் 358 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் மட்டும் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை.
தமிழில் வென்ற ஒரே பள்ளி மாணவர்கள்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மூன்று மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஆர்.கோகுலகிருஷ்ணன், எஸ்.மாதேஸ்வரன், எம்.தினகரன் ஆகிய மூன்று மாணவர்களும் தலா 198 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
மே 25-ல் மதிப்பெண் சான்றிதழ்:
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 25-ம் தேதி வழங்கப்படும். இதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இப்போது மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும்போதே, தங்களது பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் கல்வித் தகுதியை பதிவுசெய்துகொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

2,720 கணித புலிகள்
இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 2,720 பேர் நூறு சதவீத மதிப்பெண் (200-க்கு 200) பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 958 பேர் கூடுதலாக இந்த முறை கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் பிற பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வேதியியல் பாடத்தில் 1,243 பேரும், உயிரியல் பாடத்தில் 615 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

26-வது ஆண்டாக மாநில அளவில் விருதுநகர் முதலிடம்

விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 95.07 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மூன்று கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 19,032 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் அதிகம் பெற்று தொடர்ந்து 26 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts