background img

புதிய வரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை அறிக்கையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும்: நாராயணசாமி

பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும், அவர் அளித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் இறுதி விசாரணை அறிக்கையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி,

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்றம் அமைத்த பொது கணக்கு குழுவின் அறிக்கையை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கூறிவருகிறது.

பொது கணக்கு குழுவின் வேலை என்னவென்றால், மத்திய அரசின் தணிக்கை குழு, நிர்வாக துறை, பொது துறை ஆகியவற்றின் கணக்கு வழக்கை சரிபார்த்து, அதில் ஏதாவது ஊழல் நடந்திருக்கிறதா? என்பதை கண்டறிந்து, அறிக்கை தயாரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு விசாரணையில், பொது கணக்கு குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னிச்சையாக விசாரணை மேற்கொள்கிறார். குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பது இல்லை.

தற்போது, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக, இறுதி விசாரணை அறிக்கை ஒன்றை முரளி மனோகர் ஜோஷி தயாரித்து சபாநாயகரிடம் அளித்துள்ளார். இந்த அறிக்கையின் நகலை, பொது கணக்கு குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களிடம், தாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் அளித்துள்ளார்.

இதை பொது கணக்கு குழுவில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். எனவே, அந்த அறிக்கையை சபாநாயகர் ஏற்க கூடாது. ஆனால், 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு பிரச்சினையை முன்வைத்து பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை குறை கூறி வருகிறது.


இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணை, அமலாக்க பிரிவு விசாரணை, கோர்ட்டில் வழக்கு, மத்திய மந்திரியாக இருந்தவர் கைது என்று பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பா.ஜ.க.வை சேர்ந்த கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். அதுபற்றி வாய் திறக்காத பா.ஜ.க.வுக்கு, 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினை பற்றி பேசவே அருகதை இல்லை. பொது கணக்கு குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க.வின் ஏஜெண்டாகத்தான் செயல்படுகிறார்.

பா.ஜ.க. தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. 2004, 2009 ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. எனவே, ஆட்சியை மீண்டும் பிடிக்க சதி செய்கிறார்கள். அதில் ஒன்றுதான், முரளி மனோகர் ஜோஷியின் இந்த நாடகம்.

பெரும்பான்மையான உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கையை சபாநாயகர் ஏற்க கூடாது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று ஜோஷிக்கு வழங்கப்பட்ட விருதையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts