background img

புதிய வரவு

சட்டசபைத் தேர்தலில் ஏன் தோற்றோம்?-தமிழக தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது ஏன் என்பதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார் சோனியா காந்தி.

தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸுக்கு ஒரு வேலையும் இல்லாமல் போய் விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது காங்கிரஸ். வெறும் ஐந்து பேரை மட்டுமே தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள இந்த அடி, அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது தெரியவில்லை. காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை எந்த வெற்றிவந்தாலும் அது ஓசிதான். எனவே இந்த தோல்வியால் காங்கிரஸார் யாரும் மனம் உடைந்து போனதாக தகவல் இல்லை.

இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை அடித்து தரைமட்டமாக்கி விட்ட இந்த தோல்வியால் காங்கிரஸ் மேலிடம் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், இந்த அடித்தளத்தை வைத்துத்தானே கூட்டணிக்குப் பேரம் பேச முடியும் என்பதால்.

மேலும் 2014ல் லோக்சபா தேர்தல் வேறு வருகிறது. எனவே அதற்குள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

முதலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அழைத்து சோனியா பேசியுள்ளார். இவர்தான் தமிழக காங்கிரஸிலேயே மிகப் பெரிய கோஷ்டியின் தலைவராவார். இதையடுத்து எம்.பி. கார்வேந்தனை அழைத்து சோனியா பேசியுள்ளார். அடுத்து இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களையும் சோனியா அழைத்துப் பேசலாம் என்று தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தங்கபாலுவை தூக்கி விட்டு வேறு ஒரு தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த படு தோல்விக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி பொறுப்பேற்றுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் மூலம் காங்கிரஸுக்கு புதுவையில் ஆப்பு வைத்து விட்டார் முதல்வர் என்.ரங்கசாமி. இவரை பற்றி தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக தற்போது புலம்புகிறது காங்கிரஸ்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக சோனியாவை சந்தித்த போது நாராயணசாமி தெரிவித்தாராம். அதேபோல பிரதமரிடமும் தான் தோல்விக்குப் பங்கேற்பதாக நாராயணசாமி கூறியபோது அவருக்கு ஆறுதல் கூறினாராம் பிரதமர்.

பாமகவும் ஆலோசனை:

காங்கிரஸை விட மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கட்சி பாமக. தங்களது எதிர்காலம் என்னவென்றே தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது பாமக. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியே தோல்வியுற்று விட்டார்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்ட கட்சி பாமக. மேலும் முதல் ஆளாக பாமகவுக்குத்தான் சீட் ஒதுக்கினார் கருணாநிதி. அக்கட்சிக்கு 30 இடங்களைக் கொடுத்தது திமுக. ஆனால் வெறும் 4 சீட்டில் மட்டுமே வென்றுள்ளது பாமக.

போட்டியிட்ட இடங்களிலெல்லாம் அது பெரும் அடியை வாங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது வன்னியர் பெல்ட் எனப்படும் தொகுதிகளில் எல்லாம் படு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக வேளச்சேரி தொகுதியை கடுமையாக போராடி வாங்கியது பாமக. ஆனால் அங்கு அக்கட்சிக்கு நல்ல தோல்வி கிடைத்துள்ளது.

இப்படி தங்களுக்கான வாக்கு வங்கி பலமாக இருந்தும் தோல்வி அடைந்தது ஏன் என்று பாமகவினர் யோசித்து, ஆலோசித்து வருகின்றனர்.

தங்களது தோல்விக்கு திமுகதான் காரணம் என்பது பாமகவினரின் எண்ணம். அதாவது திமுக மீதான மக்கள் அதிருப்தியே தங்களை காலி செய்து விட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

இதற்கிடையே பாமகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. ஏ.கே.மூர்த்தி தலைமையில்நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக பங்கேற்கவுள்ளனர்.

அதேசமயம் திமுக தரப்பில் இதுவரை வெளிப்படையான முறையில் இப்படி எந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts