background img

புதிய வரவு

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதியே தமிழக சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடந்து விட்டது. ஆனால், மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை காத்திருந்த தமிழகம், நாளை வாக்கு எண்ணிக்கைக்குச் செல்கிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 78.80 சதவீத அளவுக்கு வாக்குககள் பதிவாகியுள்ளதால் அத்தனை அரசியல் கட்சிகளும் ஒரு வித பதட்டத்துடனேயே உள்ளன.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எந்தவித பிரச்சினையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளின் வாக்குகளும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

234 தொகுதிகளின் வாக்குகளும் 13-ந் தேதி நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஒவ்வொரு அறையிலும் ஒரு தொகுதி வாக்குகள் மட்டுமே எண்ணப்படும்.

தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் 16 ஆயிரத்து 966 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது 45 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள். 45 கம்பெனிகளில், 27 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர்.

மீதம் உள்ள 18 கம்பெனி வீரர்களும் விமானம் மூலம் வருகிறார்கள். அவர்களில் 9 கம்பெனிகள் சென்னைக்கும், 5 கம்பெனிகள் திருச்சிக்கும், 4 கம்பெனிகள் மதுரைக்கும் அனுப்பப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும் அவரது கார் வரமுடியாது.

தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்த பின்னர்தான் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். நானாக இருந்தாலும் அல்லது தேர்தல் பார்வையாளர்களாக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும், யாராக இருந்தாலும் அடையாள அட்டை இருந்தால்தான் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருட்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டர், செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் இடத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் வைத்திருக்கலாம். மற்றவர்கள் யாரும் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதே நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டு, தேர்தல் அதிகாரி ஆகிய 4 தரப்பினரும் செல்போன் கொண்டு செல்லலாம்.

ஆனால் வாக்கு எண்ணும் இடத்திற்குள் அவர்கள் செல்லும் போது யாரிடமாவது அவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும். இது உறுதியானது. பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மட்டுமே செல்போனை பயன்படுத்தலாம்.

எண்ணிக்கை தொடங்கிய உடன் பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மொத்தமாக செல்லக்கூடாது. 10 பேர் அல்லது 15 பேர்களாக 2 அல்லது 3 குரூப் ஆக சென்று படம் எடுக்கலாம். ஆனால் எந்த சின்னத்திற்கு ஓட்டு அதிகம் விழுந்திருக்கிறது என்பதை காட்டும் வகையில் படம் எடுக்கக்கூடாது.

ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ண 8 முதல் 14 மேசைகள் போடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வந்து விட வேண்டும். அப்போது யார் எந்த மேசையில் எண்ணுவார்கள் என்ற பணி ஒதுக்கப்படும்.

சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

எண்ணிக்கை தொடங்குவது முதல் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் வரை அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவும் கம்ப்ïட்டரில் எண்ணப்படும். கையினாலும் கணக்கு போடப்படும்.

இரண்டும் சரியாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப்பார்த்து வீடியோவில் பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு சுற்று முடிவும் வீடியோவில் பதிவு செய்த பின்னர் அதை பெரிய திரையில் காண்பிக்கப்படும். போர்டில் எழுதிப் போடப்படும். ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் உள்ளேயும் கேட்கும். வெளியேயும் கேட்கும்.

பத்திரிகையாளர்கள் அறைக்கு ஒவ்வொரு சுற்று அறிக்கையின் முடிவும் உடனடியாக பிரிண்ட் எடுத்து அனுப்பப்படும். மற்றொரு நகல் வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும்.

இப்படி 4 அல்லது 5 வகையான முறையில் வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதால் எந்த வித தில்லு முல்லும் இல்லாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று நம்புகிறேன்.

ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையை சரி பார்த்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். கடைசி 2 சுற்று எண்ணுவதற்கு முன்பாகவே, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் கடைசி இரு சுற்றுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

எண்ணிக்கை முடிந்த போது இரு வேட்பாளர்களுக்கு இடையே ஆயிரம் வாக்குகள் அளவில் வித்தியாசம் இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்.

எண்ணிக்கை தொடங்குவது முதல், இறுதியாக தொகுதி முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில்தான் இருக்க வேண்டும். வேறு தனி அறையில் இருந்து டி.வி. பார்க்க முடியாது. ஓய்வு எடுக்க முடியாது.

தேர்தல் அதிகாரியின் மேசை அருகேதான் டேட்டா என்ட்ரி மேசையும் இருக்க வேண்டும். கையினால் கணக்கு போடப்படுவதையும், கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுவதையும் சரி பார்த்தே முடிவு அறிவிக்கப்படும்.

இதை தேர்தல் பார்வையாளரும், தேர்தல் அதிகாரியும் பார்வையிடுவார்கள். அவர்களின் கண்காணிப்பில் தான் நடக்கும். அதனால் எந்த வித முறைகேடும் வராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 6 ஆயிரத்து 818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 386 தள்ளுபடி செய்யப்பட்டன. 1378 வழக்குகளில் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளன. 4 ஆயிரத்து 557 வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. 389 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்தல் விதிமுறைகளின் படிதான் நான் நடந்துகொண்டேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே பாகுபாடு பார்த்து செயல்படவில்லை. தேர்தல் விதிகளை முறையாக முழுமையாக அமல்படுத்தினேன். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் ஒத்துழைப்பின்படி அமைதியாக தேர்தலை நடத்தி முடித்துள்ளோம் என்றார் பிரவீன் குமார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts