background img

புதிய வரவு

சத்தியம் காக்கும் வரசித்தி விநாயகர் கோவில்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது காணிப்பாக்கம் என்ற ஊர். இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. வழிபாடு: இங்கு நடைபெறும் சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி புகழ்பெற்றது. தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தவறு செய்தவர்களை விநாயகர் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.

பொய் சத்தியம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று பயந்து உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். மிகச் சிலரே பொய் சத்தியம் செய்கிறார்கள். அப்படி பொய் சத்தியம் செய்வோரை இந்த விநாயகர் கடுமையாக தண்டிப்பார் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

ஸ்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வாய் பேச முடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். விவசாயம் செய்து வந்த அவர்களுக்கு, தங்களது உடல்குறைபாடுகளால் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியவில்லை.

பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாக புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான். ஒருமுறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர்.

தண்ணீர் வற்றிப் போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்தபோது, அங்கே சுயம்பு வடிவில் விநாயகப் பெருமான் காட்சித் தந்தார். அவரது திருமேனியில் இருந்து ரத்தம் கசிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிலையை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. வேறு வழி தெரியாத அவர்கள் கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே விநாயகரின் திருமேனிக்கு ஏராளமான இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. அதனால் அந்த ஊருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகர் இருந்த இடத்தைச் சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோவில் உருவானது.

இந்தியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சித்தூர் சென்று பின் அங்கிருந்து தான் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் செல்ல பேருந்து வசதி உள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் வசதி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts