background img

புதிய வரவு

தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீதை பிடித்துத் தருமா அமெரிக்கா?

டெல்லி: அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி விட்டது அந்த நாடு. அதேபோல இந்தியாவில் பல்வேறு படு பாதக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தீவிரவாதத் தலைவர்களையும் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனக்கு வந்தால்தான் வலியும், நோயும் என்பார்கள். அதேபோல இந்தியா தீவிரவாதத்தால் பல காலமாக அவதிப்பட்டு வந்தபோதிலும் அதை நி்வர்த்தி செய்யவோ, பாகிஸ்தானை கண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முயன்றதில்லை அமெரிக்கா. மாறாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொங்கத் தொடங்கும்போதெல்லாம் உள்ளே புகுந்து பொசுக்கென்று சூட்டைத் தணித்து பாகிஸ்தானைக் காப்பதிலேயே அது கவனமாக இருந்தது.

ஆனால் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர்தான் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்தது. அதன் விபரீதம் புரிந்தது. இதையடுத்து அது தீவிரமாக வேட்டையில் குதித்து கடைசியில் பின்லேடனை கொன்று தனது நாட்டு மக்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில், தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் அமர்ந்தபடி திட்டமிட்டு, பல்வேறு தீவிரவாத செயல்களை இந்தியாவில் அரங்கேற்றிய பலரும் இன்னும் பாகிஸ்தானில்தான் நிம்மதியாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

தாவூத் இப்ராகிம், ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் இவர்களில் சிலர். இவர்களில் ஹபீஸ் சயீத், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் மூளை ஆவார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான இவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவே இல்லை.

சயீத்துக்கு, மும்பைத் தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது இந்தியா. இந்த ஆதாரங்களை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் தெரிவித்துள்ளது.+

தற்போது பின்லேடன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மீதான தனது நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவிட வேண்டும் என்ற எண்ணமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தவிர பின்லேடன் உள்ளிட்ட பலரும் கூட பாகிஸ்தானில்தான் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று இந்தியா பல முறை சொல்லியுள்ளது. தொடர்ந்து கூறியும் வந்தது. ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அது பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. இதை அமெரிக்கா கூட பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அதேபோல மும்பையில் முன்பு நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவரான தாவூத் இப்ராகிமை ஒப்படைகக் கோரி இந்தியா விடுத்த வேண்டுகோள்களையும் இதுவரை பாகிஸ்தான் ஏற்கவே இல்லை.

எனவே இந்தியாவுக்கு உதவும் வகையில் இவர்களையும் பிடித்துத் தர அமெரி்ககா உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதேபோல, பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டவும், அவர்களின் முகாம்களை அழிக்கவும் அமெரிக்கா நினைத்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

ஆனால் அதை அமெரிக்கா நிறைவேற்றுமா என்பது சந்தேகம்தான்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts