background img

புதிய வரவு

திரைப்படத் துறைக்கு உயிர்கொடுங்கள்! - ஜெயலலிதாவுக்கு தங்கர் பச்சான் வேண்டுகோள்

சென்னை: "தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் தயாரிக்கும் நிலையை உருவாக்கி, சினிமாவுக்கு உயிர் கொடுக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் ஒருமித்த தீர்ப்பின் மூலம் முதல்வருக்கு மிகப்பெரிய பொறுப்பினை அளித்துள்ளனர். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, ஆட்சியாளர்கள் நேர்மை தவறியதற்காகவும், இனி ஆளப்போகிறவர்கள் நேர்மை தவறாமல் இருப்பதற்காகவும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

தங்களின் வாக்குரிமை ஒன்றின் மூலம் மட்டுமே எதிர்ப்பினையும், தேவையையும் உணர்த்துகின்ற வகையில் வாக்களித்திருக்கின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மட்டுமே. விளைவிக்கிற பொருளுக்கு உரிய விலையையும், நீர் ஆதாரத்தையும், இடுபொருள், பூச்சிக்கொல்லிகளையும், உரிய நேரத்தில் தந்து விவசாய தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தால், கட்டுப்பாட்டையும் மீறி பல மடங்கு உயர்ந்து விட்ட உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தலாம்.

அத்துடன் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்கிற நமது முதல்-அமைச்சர் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனாலும், கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்து மதுக்கடைகள் அனைத்தையும் ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக அமைக்க வேண்டும்.

ராஜபக்சேவுக்கு தண்டனை

ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்று தர தமிழக அரசு மத்திய அரசினை வற்புறுத்தும் எனச்சொல்லி நம்பிக்கையை விதைத்திருக்கிற முதல்வர் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இதற்கான ஆணையை நிறைவேற்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

யார் வேண்டுமானாலும் திரைப்படங்கள் தயாரிக்க...

திரைப்படத் தொழில் தொடங்கிய காலந் தொட்டு திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட கடந்த ஆண்டுகளில் தயாரிப்பதை நிறுத்தி விட்டதோடு, புதியதாக படங்கள் தயாரித்தவர்களுக்கும், தயாரித்த படங்களை வெளியிட முடியாமல் கடனில் சிக்கி தவித்து மூழ்கி கொண்டிருக்கும் வேளையில் நான் சாந்திருக்கின்ற திரைப்படத்துறையை நம்பியிருக்கிற பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினையை முதல்வர் தீர்ந்து வைப்பார் என நம்புகிறேன்.

திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கின்ற என்னைப்போன்ற கலைஞர்கள் சுதந்திரமாக செயல்படவும், யார் வேண்டுமானாலும், திரைப்படத்தை தயாரிக்கலாம், யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்கி தந்து மக்களுக்கான திரைப்பட கலைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவை பெற்ற முதல்வருக்கு ஒரு கலைஞன் என்ற முறையில், ஒரு வாக்காளன் என்ற முறையில் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறி வேண்டுகோளை தமிழக மக்களின் சார்பில் வைக்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts