background img

புதிய வரவு

தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தபடி சாயப்பட்டறை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை; பதவியேற்ற 4-வது நாளிலேயே ஜெயலலிதா பேச்சுவார்த்தை

தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தபடி, சாயப்பட்டறை பிரச்சினையை தீர்க்க பதவியேற்ற 4-வது நாளிலேயே முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த மாதம் 7-ந் தேதி திருப்பூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, சாயப்பட்டறை பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து பேசி சில உறுதிமொழிகளையும் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கருணாநிதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, 750-க்கும் மேற்பட்ட சாய, சலவை பட்டறைகள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். உற்பத்தி இழப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதன்விளைவாக பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்தொழில் முடங்கும் நிலைக்கு வந்துவிட்டது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் அழைத்துப்பேசி மூடப்பட்டுள்ள சாய, சலவை ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

இவ்வாறு ஜெயலலிதா உறுதி அளித்தார்.

அதன்படி, சாயப்பட்டறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பதவியேற்ற 4-வது நாளிலேயே முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினை குறித்து தீர்வு காண ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிதித்துறை அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், திருப்பூர் சாயப்பட்டறைகள் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். முதல்கட்டமாக சாயத்தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், அதைப்போலவே பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், அதன்மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறப்புடன் பணி முடித்த அமுதா * எல்லோராலும் பாராட்டப்பட்ட கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பி.அமுதா, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மிகவும் கண்டிப்பான அதே நேரத்தில் தனது உறுதியான உத்தரவுகளை அன்போடு பேசி நிறைவேற்றும் ஆற்றல் படைத்தவர். இரும்பு உத்தரவுகளைக்கூட தென்றலாய் பிறப்பிக்கும் அவரது பாங்கினை அனைத்து அரசியல் கட்சியினரும் பாராட்டினார்கள். தனது செல்போன் எண்ணை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிவித்த அமுதா, தேர்தல் நேரங்களில் யார் அந்த செல்போனில் பேசினாலும் உடனே பேசி குறைகளை நிவர்த்தி செய்தார். தேர்தல் பணிக்காகவே அவர் இந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.

இப்போது அவரது பணி முடிந்துவிட்டது. இனிமேல் அவரை விடுவிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் கமிஷனும் ஓரிரு நாளில் தேர்தல் பணியில் இருந்து பி.அமுதாவை விடுவித்துவிடும்.

அதன்பிறகு தமிழக அரசில் அவருக்கு உரிய ஒரு பதவி வழங்கப்படும். - முதல்-அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் * முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக ந.தங்கையன், த.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. அவர்கள் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அவர்கள் இருவருமே சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். இப்போது அந்த சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டு உள்ளது. - எப்படி கொடுப்பது 20 கிலோ அரிசி? * பதவியேற்ற நாளிலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, ஜுன் 1-ந் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியையும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசியையும் எப்படி வழங்குவது என்று உணவுத்துறை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. பெண்களால் ஒரே தடவையாக 20 கிலோ அல்லது 35 கிலோ அரிசி எடுத்துச்செல்ல முடியாது. இவ்வளவு எடையுள்ள அரிசியை பாலிதீன் பைகளிலும் போட்டு கொடுக்க இயலாது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைப்பதாக இருந்தால், அதற்கு முன்பே 20 கிலோ அரிசியையும் ஒரே தடவையாக கொடுப்பதா அல்லது பல கட்டங்களாக கொடுப்பதா என்பதும், அரிசியை தனியாக பையில் போட்டுத்தருவதா அல்லது பயனாளிகள் எடுத்து வரும் பைகளில் அளந்து போடுவதா என்பதும் முடிவாகிவிடும். - சிறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி

*புதிய தலைமை செயலகம் செயல்பட தொடங்கியதால் பழைய தலைமை செயலகத்திற்கு பொதுமக்கள் போக்குவரத்து குறைந்துவிட்டது. இதனால், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்த கடைகளில் குறிப்பாக சிறு வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதித்தது. வருமானம் குறைந்ததால் வியாபாரிகள் அவதிப்பட்டார்கள். இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கவலையில் இருந்தனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப்பிடித்து, ஜெயலலிதா 3-வது முறையாக முதல்-அமைச்சரானார். இதையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வருகையால் கோட்டை மறுபடியும் களைகட்டிவிட்டது. வியாபாரமும் சூடுபிடித்துள்ளது.

இதனால் வறுகடலை, பழங்கள், காய்கறிகள், கைக்குட்டை போன்றவற்றை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts