background img

புதிய வரவு

அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா, பஞ்சாப் கடும் போட்டி; 5 அணிகள் வெளியேற்றம்

ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. “லீக்” முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும். நேற்றுடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 “லீக்” போட்டிகள் எஞ்சியுள்ளன.

சென்னை சூப்பர்கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் மோதும் கடைசி “லீக்” ஆட்டம் வருகிற 22-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு உள்ளன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துள்ளன. இதில் கொச்சி அணி அனைத்து “லீக்” ஆட்டங்களிலும் விளையாடி முடிந்து விட்டது. கொச்சி அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்), டெல்லி டேர் டெவில்ஸ் 8 புள்ளிகளும் (13 ஆட்டம்) பெற்றுள்ளன.

தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கில்கிறிஸ்ட் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைய வேண்டி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (நாளை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22-ந்தேதி) ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இரண்டு ஆட்டத்திலும் வென்றால் முதல் இடத்தையோ அல்லது இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 14 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. புனே வாரியர்ஸ் அணியுடனும் (இன்று) மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் விளையாட வேண்டும். இந்த 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். பஞ்சாப் அணி 14 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் டெக்கானுடன் 21-ந்தேதி மோதுகிறது. இதில் கண்டிப்பாக வென்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொரு போட்டியில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால் இந்த 3 அணிகளும் 16 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts