background img

புதிய வரவு

ரங்கசாமிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி?

புதுவை மாநிலத்தில் ரங்கசாமி பெற்ற அமோக வெற்றியின் பின்னணி என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி புதுவை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த அமோக வெற்றியின் பின்னணிக்கு அனைத்து சமூகத்தினர் ஆதரவே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரங்கசாமி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. தனி மனிதன் முதல்-அமைச்சர் பதவி பெறுவதற்காக ஒரே ஒரு சமுதாயத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று விமர்சனம் செய்தனர்.
ஆனால் இந்த விமர்சனம் தவிடுபொடியாகி உள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 தனி தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போட்டியிட்ட நெடுங்காடு, திருபுவனை, ஏம்பலம், ஊசுடு ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நெட்டப்பாக்கம் தனி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 5 தனி தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளில் பெரும் பகுதியை கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது.

இதோடு பிற சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரும் ரங்கசாமியின் பக்கமே இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு பெண்களும், முதன்முறையாக வாக்களித்த இளைஞர்களும் பெரும்வாரியாக ரங்கசாமிக்கே வாக்களித்துள்ளனர்.

இதற்கு ரங்கசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் முதியோர் மற்றும் விதவைகள் பென்சன் தொகை பெறலாம் என்பதால் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பென்சன் பெறலாம் என்பதை இணைத்ததும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் முத்திரைதாள் கட்டணத்தில் சலுகை என்ற அறிவித்ததும் காரணம் ஆகும்.

இதேபோல் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ரங்கசாமி அறிவித்த காலை மாலை உணவு திட்டம், பள்ளி மாணவர்கள் உபகரணம் வாங்க நிதி, காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் ஆகியவை கவர்ந்து இருந்தது.

இந்த திட்டங்களில் சிலவற்றை ரங்கசாமியை அடுத்து பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு நிறுத்தியது. சில திட்டங்களில் வரைமுறைகளை மாற்றி அமைத்தது. இது முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாக்குகள் ரங்கசாமி பக்கம் அப்படியே திரும்பியது.

இவையே ரங்கசாமியின் அமோக வெற்றிக்கு பின்னணியாக இருந்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts