background img

புதிய வரவு

2ஜி முறைகேடு: இராசா உள்ளிட்ட 4 பேர் கைது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது.

இன்று காலை 4 ஆவது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க.அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, இராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 31 ஆம் தேதியும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காவது முறையாக இராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,அவரும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கபப்ட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமையன்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

அதில் 2ஜி ஒதுக்கீட்டில் விதிமுறை மீறல்கள் இருந்ததாகவும்,இதற்கு காரணமாக சில அதிகாரிகள் மற்றும் ராசாவின் பெயர் இருந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இராசாவை சிபிஐ கைது செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts