background img

புதிய வரவு

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது

புதுடில்லி: லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோலிக்கு அனுப்பப்பட்டன. இதில், முதல் விமானத்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில், தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் லிபியாவில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக இறங்கியுள்ளன.

இரண்டு சிறப்பு விமானங்கள்: டிரிபோலி, பெங்காசி, சபா மற்றும் குப்ரா நகரங்களின் உள்ள விமான நிலையங்களில் இந்தியர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 விமானம் மற்றும் ஏர்பஸ் 330 விமானம் இரண்டும், நேற்று டிரிபோலியில் தரையிறங்கின. இந்த விமானங்கள் இரண்டிலும், 640 பேர் பயணிக்க முடியும். முதல் விமானம் 300 பேருடன் நேற்று மாலை 4.10 மணிக்கு டிரிபோலியில் இருந்து புறப்பட்டு, இரவு 12 மணிக்கு டில்லி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மீட்புப் பணியில் இந்த விமானங்கள் மார்ச் 7ம் தேதி வரை ஈடுபடுத்தப்படும்.

நான்கு கப்பல்கள்: இவை தவிர, ஐ.என்.எஸ்., ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்., மைசூர் என்ற இரண்டு கப்பல்கள், மும்பையில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன. எகிப்தின் "போர்ட் சயீத்' துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற கப்பல், நாளை நண்பகலில் பெங்காசி போய்ச் சேரும். இக்கப்பலில் 1,200 பேர் பயணிக்க முடியும். மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் மற்றொரு பயணிகள் கப்பல், லிபியாவுக்குத் திருப்பி விடப்பட்டு, அதன் மூலமும் இந்தியர்கள் மீட்கப்படுகின்றனர். இந்த இரண்டாவது கப்பலில் 1,600 பேர் பயணிக்க முடியும். இதுதவிர, மேலும் இரண்டு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் லிபியாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள், எகிப்தின் அலெக்சாண்டிரியா நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர். மீட்புப் பணியில் உதவுவதற்காக, டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் மேலும் பல அதிகாரிகளை, இந்திய வெளியுறவு அமைச்சகம் பணிக்கு அமர்த்தியுள்ளது.

உணவு, தண்ணீரின்றி தவிப்பு: லிபியா - டுனீசியா எல்லைக்கருகில் உள்ள ஜாவியா நகரில், கடாபி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்கள், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள ஓர் இந்தியர் கூறுகையில்,"ஜாவியாவில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கவலையுடன் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts