background img

புதிய வரவு

கோரிக்கையை கிண்டல் செய்ததால் தி.மு.க.,விடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்., குழு அதிருப்தி

சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தரப்பில் கிண்டல் செய்ததால், காங்கிரஸ் ஐவர் குழு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இரு கட்சிகளிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் ஐவர் குழு இடையே, 20ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என, காங்., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை தி.மு.க., ஏற்காததால், அன்றைய பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து, காங்., தலைவர் சோனியாவிடம் தெரிவித்தனர். தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீடு திட்டத்தை ஏற்காத சோனியா, புதிய மாற்றுத் திட்டத்தை அளிக்குமாறு தி.மு.க.,வை கேட்டுக் கொண்டார். கால தாமதமின்றி பேச்சுவார்த்தையை நடத்துமாறு, தி.மு.க.,வினர், சோனியாவை வலியுறுத்தியதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவாலயத்தில் துவங்கியது. அடுத்த 25 நிமிடங்களுக்குப் பின், முதல்வர் கருணா நிதி அறிவாலயம் வந்தார். அதனால், பேச்சுவார்த்தை முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக தகவல் பரவியது.

பேச்சுவார்த்தைக்கிடையே, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் முதல்வர் இருக்கும் அறைக்கு சென்றனர். ஐந்து நிமிடங்களில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் அறைக்கு திரும்பினர். இதனால், இன்னும் சில நிமிடங்களில் உடன்பாடு எட்டப்படும் என்று அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து அமைச்சர்கள் சிதம்பரம்,வாசன் ஆகியோர் வேகமாக வெளியேறினர். முதல்வர் இருக்கும் அறைக்கு இவர்கள் செல்கிறார்களோ என எதிர்பார்த்து காத்திருந்த போது, அவர்கள் கார்களில் ஏறி அறிவாலயத்திலிருந்து வெளியில் சென்றதைப் பார்த்து, இரு கட்சி தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சிதம்பரம், வாசனை தொடர்ந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, "பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும்' என கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.

நடந்தது என்ன? பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, கிண்டல் பேச்சுக்கு பெயர் பெற்ற தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவர் செய்த கிண்டல் தான், உடன்பாடு ஏற்படாமல், காங்., தலைவர்கள் வெளியேறியதற்கு காரணம் என கூறப்படுகிறது. எப்போதும் நகைச்சுவை, கேலி, கிண்டலாக பேசக்கூடிய அந்த அமைச்சர், காங்கிரஸ் குழுவினரிடம், "உங்களிடமும் உளவுத்துறை உள்ளது; எங்களிடமும் உளவுத்துறை உள்ளது. இரு கட்சிகளின் பலத்தையும், இருவரும் அறிவோம். வேண்டுமானால், கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில், நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில், நாங்கள் 200 இடங்கள் கேட்டால், நீங்கள் தந்து விடுவீர்களா? சும்மா மிரட்டாதீர்கள்' என கிண்டலாக கூறியுள்ளார். இதனால், காங்., குழுவினர் வருத்தம் அடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர் அடித்த கிண்டலால், காங்., குழுவினர் தி.மு.க., மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தரப்பினர் கூறும் போது, "பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே 53 இடங்கள் தான் தரப்படும்; மேலிடத்தில் கேட்டு விட்டு வாருங்கள் என, தி.மு.க.,வினர் கூறியதால், பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் காங்., குழுவினர் சென்றனர்' என்றும் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts