background img

புதிய வரவு

சபை சுமுகமாக நடக்க ஜே.பி.சி., அமைக்க முடிவு : பிரதமர் அறிவிப்பு

புதுடில்லி:""2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையால், குளிர்கால கூட்டத்தொடர் முழுவதுமாக வீணடிக்கப்பட்டது. தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு, சேவை செய்ய தவறி விட்டோம். அதுபோல அல்லாமல், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க வேண்டும். அவை அலுவல்கள் முழுவதுமாக நடைபெற வேண்டும். அதற்கு வழி செய்யும் வகையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழிமுறைகள் விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையுடன் பார்லிமென்ட் கூடியது. இதையடுத்து, முறைப்படி நேற்று லோக் சபாவும், ராஜ்ய சபாவும் வழக்கமான அலுவல்களுடன் இயங்க துவங்கின. அனைவரும் எதிர்பார்த்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் மீதான விசாரணை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வாசிக்க இருந்ததால் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.சமீபத்தில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் சிலர் கேபினட்டில் இடம் பிடித்தனர். இதனால், லோக்சபா கூடியதும் அந்த அமைச்சர்களை அவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுக படலம் முடிந்ததும் "2ஜி' ஸ்பெக்ட்ரம் குறித்து கூட்டுக்குழு அமைப்பது குறித்த முடிவை அறிவித்தார்.

அப்போது பிரதமர் கூறியதாவது:கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. அந்த கூட்டத்தொடர் முழுவதுமாக வீணடிக்கப்பட்டது. அதற்கு காரணம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஊழல் தான். இப்பிரச்னைக்காக பார்லிமென்ட் முற்றிலுமாக முடங்கி விட்டது. அத்தியாவசிய அலுவல்கள் கூட நடைபெறாமல் போனது. இதன் மூலம் நம்மை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கு, உரிய சேவை செய்ய தவறி விட்டோம்.ஊழல்களை ஒழிக்க வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு தேவைப்படும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு குறித்து, ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணை நடத்துகிறது. பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு விசாரிக்கிறது.சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரித்து முடித்து, அந்த அறிக்கை மக்கள் மத்தியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிர தொலைத்தொடர்பு துறை அமைச்சமும் விரைந்து செயல்படுகிறது. இவ்வளவு நடவடிக்கைகள் இருந்தும் கூட எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.

இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது, வீணடிக்கப்படுவது என்பதெல்லாம் நடக்க கூடாது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இக்குழுவை அமைப்பது தொடர்பான வழிமுறைகள் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவு விரைவில் அறிவிக்கப்படும். கூட்டுக்குழு அமைக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதை அடுத்து, இனிமேல் பார்லிமென்டின் அவை நடவடிக்கைகள் எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டும்.இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, "கூட்டுக்குழு அமைப்பதற்கு ஒப்புக் கொண்ட பிரதமக்கு மிக்க நன்றி. இவ்விஷயத்தில் யாருக்கும் வெற்றியும் அல்ல; யாருக்கும் தோல்வியும் அல்ல. இது ஜனநாயகத்தின் வெற்றி' என்றார்.

முலாயம் சிங் பேசும் போது, "இந்த கூட்டுக்குழுவை அமைப்பதற்கு முன்கூட்டியே அரசு ஒப்புக் கொண்டிருந்திருக்கலாம். அவ்வாறு ஒப்புக் கொண்டிருந்தால் குளிர்கால கூட்டத்தொடர் வீணாகியிருக்காது' என்றார்.

குருதாஸ் தாஸ் குப்தா பேசும்போது, "பிரதமருக்கு சுஷ்மா சுவராஜ் எதற்காக நன்றி தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. பிரதமர் செய்திருப்பது அவரது கடமையை. அதுவும் மிக தாமதமாக தன் கடமையை பிரதமர் செய்துள்ளார். அதற்கு நன்றி சொல்லவோ, பாராட்டு சொல்லவோ அவசியமில்லை' என்றார்.

சரத்யாதவ் பேசும் போது, "2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்கு மட்டும் கூட்டுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ.,வில் கொள்ளை நடந்துள்ளது. ஆதர்ஷ் ஊழல் உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இவை பற்றியெல்லாம் பூசி மொழுகப்பட்டு, ஸ்பெக்ட்ரம் பற்றி மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சரியல்ல' என்றார்.

தம்பித்துரை பேசும் போது, "கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று, கடந்த 2 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வந்தது அ.தி.மு.க., மட்டுமே. அமைக்கப்படபோகும் கூட்டுக்குழுவில் சிறிய கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்' என்றார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தின் மையமாக விமர்சிக்கப்படும் தி.மு.க., சார்பில், நேற்று அவையில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதுவரை எத்தனை ஜே.பி.சி., : இதுவரை, நான்கு முறை, பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி.,) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.முதன்முறையாக, போபர்ஸ் பீரங்கி பேர ஊழலுக்காக ஜே.பி.சி., அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 1987, ஆக., 6ம் தேதி, அப்போதைய ராணுவ அமைச்சர் கே.சி.பந்த்தால் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இக்குழுவின் தலைவராக சங்கரானந்த் இருந்தார். மொத்தம், 50 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 1988, ஏப்., 26ம் தேதி, இதற்கான அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவதாக பண பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 1992, ஆக., 6ம் தேதி, அப்போதைய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக ராம் நிவாஸ் சர்மா இருந்தார். மொத்தம், 91 முறை இக்குழு கூடி, 1993, டிச., 21ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

மூன்றாவதாக, பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரிக்க, ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 2001, ஏப்., 26ம் தேதி, அப்போதைய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜனால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக எஸ்.பி.எம்.திரிபாதி இருந்தார். 105 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 2002, டிச., 19ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நான்காவதாக, குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்படுவதாக எழுந்த பிரச்னை குறித்து விசாரிக்க, ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், 2003, ஆக., 22ம் தேதி, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜால் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக சரத் பவார் இருந்தார். 17 முறை கூட்டம் நடத்தப்பட்டு, 2004ம் ஆண்டு பிப்., 4ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ராஜ்ய சபாவில் வாக்குவாதம் : ராஜ்ய சபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங் கூட்டுக்குழு அமைப்பது குறித்த தன் உரையை வாசித்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, பிரதமரின் அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டதற்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஊழல் என்பது போல பிரதமர் பேசுகிறார். எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவது போல இந்த அறிக்கை உள்ளது. கூட்டுக்குழு அமைப்பது தொடர்பாக அரசின் தொடர் பிடிவாதமே குளிர்கால கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதற்கு காரணம்' என்று குறிப்பிட்டார்.இதனால், அவையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - அ.தி.மு.க., கட்சி எம்.பி.,க்களுக்கு இடையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

"ஜவ்வ்வ்வாய்' இழுத்த ஜே.பி.சி., : 2007 மே 18: தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆக., 18: டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை, தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆக., 28: ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், டிராயின் பரிந்துரைகளை நிராகரித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, "முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது' என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ல், 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். 2007 முதல், 2008 வரையிலான காலத்தில், இது, 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால், அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல், இழப்பு ஏற்படக் காரணமாக, இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்., 20 - 25: "யூனிடெக், லூப், டாடாகாம் மற்றும் ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. யூனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறையில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்கள்.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார். ஸ்வான் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜன., 1 - 10: அமைச்சர் ராஜா, சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது செயலராக பணியாற்றிய சித்தார்த்தா பெகுராவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலராக நியமித்தார். பின் தொலைத்தொடர்பு அமைச்சகம், 10 நாட்களில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்., - அக்.,: ஸ்வான் நிறுவனம், 45 சதவீத பங்குகளை எட்டிசேலட் என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம், 60 சதவீத பங்குகளை, டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு, 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை, 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து யூனிடெக் நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ், 26 சதவீத பங்குகளை டோகோமா என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு, 13,230 கோடி ரூபாய்க்கு விற்றது.
இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், 70 ஆயிரத்து 22.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு, 10 ஆயிரத்து 772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஒன்பது லைசென்சில் மட்டும், 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2009 அக்., 21: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
2010 ஏப்., 12: சுப்பிரமணியசாமி, டில்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்.
அக்., 29: மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாகக் கூறி சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை தெரிவித்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts