background img

புதிய வரவு

'லஞ்சம் லஞ்சம் லஞ்சம்...': நால்கோ தலைவர் மனைவியுடன் கைது!

டெல்லி: இந்தியாவின் மிக முக்கிய அரசு நிறுவனங்களுள் ஒன்றான தேசிய அலுமினிய கழகத்தின் (நால்கோ) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அபய்குமார் ஸ்ரீவத்ஸவா லஞ்சப் புகாரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜபர்படுத்தப்படுகிறார்.

மத்திய அரசுக்கு அதிக வருவாய் பெற்றுத்தரும் நவரத்னா நிறுவனங்கள் எனப்படும் 9 பொதுத்துறை நிறுவனங்களில் தேசிய அலுமினியம் கழகமும் (நால்கோ) ஒன்றாகும். மத்திய சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அபய்குமார் ஸ்ரீவஸ்தவா உள்ளார்.

2009-ம் ஆண்டு நல்கோ தலைவர் பொறுப்பை ஏற்ற ஸ்ரீவஸ்தவா, லஞ்சம் வாங்கி குவிப்பதாக சி.பி.ஐ.க்கும் மத்திய அரசுக்கும் ஏராள மான புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து ஸ்ரீவஸ்தவாவின் நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய மாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஸ்ரீவஸ்தவா பல இடைத் தரகர்களை வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒரு இடைத்தரகரான பஜாஜ் என்பவர் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் அலுமினிய நிறுவனத்துக்கு உரிமம் பெற, ஸ்ரீவஸ்தவாவை அணுகினார். அந்த உரிமம் கொடுக்க 3 கிலோ தங்க கட்டிகளை ஸ்ரீவஸ்தவா கேட்டதாக தெரிகிறது. இதற்கு சம்மதித்த அந்த நிறுவனத்தினர் 3 கிலோ எடை உள்ள 3 தங்க கட்டிகளை பஜாஜிடம் கொடுத்தனர்.

ஸ்ரீவஸ்தவா பேரம் பேசி 3 தங்க கட்டிகள் வாங்கி இருப்பது சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. ஸ்ரீவஸ்தவாவை கையும், களவுமாக பிடிக்க நினைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக அவரைப் பின் தொடர்ந்தனர்.

இது தெரியாமல் ஸ்ரீவஸ்தவா தன் மனைவி சாந்தினி, இடை தரகர் பஜாஜ், அவரது மனைவி அனிதா பஜாஜ் ஆகியோருடன் டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள பேங்க் ஆப் மகராஷ்டிராவுக்கு சென்றார். அங்கு அவர் லாக்கரில் தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்தபோது சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக அவரைப் பிடித்தனர்.

ஸ்ரீவஸ்தவா உள்பட 4 பேரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஊழல் செய்து பலகோடி ரூபாய் சம்பாதித்து இருப்பது தெரிந்தது. உடனடியாக 4 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். வங்கி லாக்கர் இடைத்தரகர் பஜாஜின் மனைவி அனிதா பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. அவரை பினாமியாக வைத்துதான் ஸ்ரீவஸ்தவாவும், அவர் மனைவியும் லஞ்சமாக தங்க கட்டிகளாக வாங்கி வைத்திருப்பது தெரிந்தது.

லாக்கரில் இருந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 2 கோடி ரூபாயாகும். இதையடுத்து டெல்லி, நொய்டா, புவனேசுவர் உள்பட சில நகரங்களில் உள்ள ஸ்ரீவாஸ்தவாவின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத 30 லட்சம் ரூபாயை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

ஸ்ரீவஸ்தவாவின் மனைவி சாந்தினி வைத்திருந்த கைப்பையை வாங்கி அதிகாரிகள் சோதித்தபோது, அதற்குள் 5 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருந்தது தெரிய வந்தது. ஸ்ரீவஸ்தவாவும் அவர் மனைவியும் வேறு எங்கெங்கு ஊழல் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விசாரணை நடந்து வருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்...

கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீவஸ்தவாவையும் அவரது மனைவியையும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்துகின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts