background img

புதிய வரவு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பட்ஜெட்

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கிலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாய உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மத்திய அரசின் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அதன்படி இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 8.6 சதவீதமாக இருக்கும். வரும் 2012-13ம் ஆண்டில் இந்த வளர்ச்சியை 9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீராகவும், உறுதியாகவும் அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. தவிர விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய நடவடிக்கையாக, விவசாய உற்பத்திக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலையளிப்பதாக உள்ளது. உணவுப் பொருட்களின் வினியோகத்திற்கும், அதன் விற்பனைக்கும் இடையில் தான் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த விற்பனைக்கான விலைகள் எதுவுமே சில்லறை விற்பனையில் பிரதிபலிக்காமல் உள்ளது. இதனால், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் பயனில்லை; நுகர்வோரான பொதுமக்களுக்கும் பயனில்லை. ஆகவே, இந்த சிக்கலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும். இத்துடன் தனி நபருக்கு, வருடத்திற்கு 2,000 ரூபாய் கிடைக்கும் வகையில் சலுகைகள் தரப்பட்டிருக்கின்றன. இதனால், அரசுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். "சுகம்' என்ற பெயரில் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி செலுத்தும் படிவம் இந்தாண்டு அறிமுகமாகும்.
கலால் வரி: கடந்தாண்டு ஊக்குவிப்பு நிதியாக 370 பொருட்களுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் 130 பொருட்களுக்கான வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வந்த பிறகு இது அமலுக்கு வரும். வரி சீர்திருத்தம் செய்யும் வகையில் இரண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி வரி குறியீடு என்பது 2012ம் ஆண்டு முதல் அமல் ஆகும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குறித்து, மாநில அரசுகளுடன் இருந்த சில சிக்கல்கள் களையப்பட்டுவிட்டதால், வரைவு மசோதா குறித்து இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
பங்குகள் விற்பனை வாயிலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டப்படும். உள்கட்டமைப்புக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். கங்கை நதி தவிர நாட்டின் பிற நதிகளை சுத்தம் செய்வதற்கு 200 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளம் 3,000 ரூபாயாகவும், அங்கன்வாடி உதவியாளர்களின் சம்பளம் 1,500 ரூபாயாகவும் உயரும். விலைவாசி உயர்வுக்கு ஏற்பட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் உயர்த்தி வழங்கப்படும். 2,000 பேர் வசிக்கும் 73 ஆயிரம் கிராமங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவங்கப்படும்.
விவசாயிகளுக்கு கடந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தாண்டு 4 சதவீத வட்டியில் 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். தற்போது 20 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும் வீட்டுக் கடன், இனி 25 லட்ச ரூபாய் வரையில் வழங்கப்படும்.
கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 26 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் ஆகும். கல்வி திட்டங்களுக்கு 52 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். இது கடந்தாண்டை காட்டிலும் 24 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெண்கள் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு 500 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும், சிறு தொழில் முனைவோர்கள் மேம்பாட்டிற்கு என 5,000 கோடி ரூபாய் செலவில் தனி திட்டமும் செயல்படுத்தப்படும். 80 வயதை தாண்டிய முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 800 ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts