background img

புதிய வரவு

முதல்வரின் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி மனிதச் சங்கிலி: ஜெ.,

சென்னை : ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த ஊழலை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: சினிமா டிக்கெட் விற்பனை போல, "2ஜி' ஒதுக்கீடு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. ஆனால், கருணாநிதியோ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, அனுமானத்தின் அடிப்படையிலானது என்றும், ராஜாவின் நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் மொபைல் போனில் பேசுகிற சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது என்றும் மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவித்தார்.இது மட்டுமல்லாமல், பார்லி., கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்ற கருத்தையும் வெளிப்படுத்தி, அதற்கும் முட்டுக்கட்டை போட்டார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கருணாநிதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல, இந்த ஊழலை கிளறக் கிளற புதுப் புது ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. வோல்டாஸ் நில விவகாரம், கோத்தகிரியில் வின்சர் எஸ்டேட், நிரா ராடியா - ராஜாத்தியுடனான உரையாடல், நிரா ராடியா - கனிமொழியுடனான உரையாடல், அமைச்சர் பதவியை பெற்றுத் தருவதற்காக தயாளு, 600 கோடி பெற்றது, நிரா ராடியா கருணாநிதிக்கு முன் கூட்டியே அறிமுகமான விவரம் என, ஒன்றன் பின் ஒன்றாக விஷயங்கள் வெளி வந்தன.

சி.பி.ஐ., விசாரணையில் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கிய, டெனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் கனிமொழி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டுள்ள கருணாநிதி குடும்ப, "டிவி'க்கு, 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது. இதிலிருந்து, கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெகுவாக பயனடைந்து இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.எனவே, கருணாநிதி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த மெகா ஊழலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இன்று, பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் மனிதச் சங்கிலி பேரணியுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts