background img

புதிய வரவு

கடாபியின் அடக்குமுறைக்கு பதிலடி தரப்படும்: ஒபாமா

வாஷிங்டன்: லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அதிபர் கடாபியின் அரசுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் அடக்கு முறைக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும், ஒருமித்த வகையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக, அதிபர் பதவியில் இருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இதனால், லிபியா மக்கள் மீது அதிபர் கடாபியின் நிர்வாகம், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவத்தினரும், கடாபியின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானங்கள் மூலமும் குண்டு வீசப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சொந்த நாட்டு மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, ரத்த ஆறு ஓடச் செய்யும் அதிபர் கடாபிக்கும், அவரது நிர்வாகத்திற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிபியாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மூர்க்கத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தண்டிக்கும் நடவடிக்கையில் அதிபர் கடாபியின் அரசு இறங்கியுள்ளது. இந்தச் செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. நாகரீகமற்ற செயலும் கூட. லிபியா அரசின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு,தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என, உலக நாடுகள் அனைத்தும் ஓங்கி குரல் எழுப்ப வேண்டும். லிபியா மக்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். லிபியாபில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி எனது நிர்வாகத்தையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். மற்ற கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைந்து நல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற உலக நாடுகளைப் போல, லிபியா அரசும் வன்முறைகளில் ஈடுபடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் மனிதாபிமான ரீதியான உதவிகளை வழங்க வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். இதுவரை கடமைகளைச் செய்யத் தவறியமைக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இதற்கிடையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும்' என்ற தனது வேண்டுகோளை லிபியா அதிபர் கடாபி நிராகரித்ததற்கு ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய மூன் கூறியதாவது: லிபியா அதிபருடன் நான் நீண்ட நேரம், விரிவான விவாதம் நடத்தினேன். மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இருந்தும், எனது வேண்டுகோளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை. அவர் செய்யும் செயல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. லிபியா நிலவரம் மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே, நிலைமையை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், என்றார்.

கடாபி மகள் பதவி பறிப்பு: லிபியா அதிபர் கடாபியின் மகளுக்கு வழங்கப்பட்டிருந்த நல்லெண்ண தூதர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறியதாவது: ஐ.நா., மேம்பாட்டுத் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா அதிபர் கடாபியின் மகள் ஆயிஷா அல்-கடாபி, கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி லிபியாவிற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், வறுமையை ஒழிப்பதற்கான லட்சியங்களை நிறைவேற்றுதல் போன்றவை தொடர்பான ஐ.நா., வின் பணிகளில் அதிக முக்கியத்துவம் காட்டுவதற்காக ஆயிஷா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், லிபியாவில் தற்போது நடந்து வரும் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் காரணமாக ஆயிஷாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது, என்றார். இவ்வாறு மார்ட்டின் கூறினார்.

மீட்புப்பணியில் இந்தியக்கப்பல்: வன்முறையால் பாதித்த லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் தற்போது, பெங்காசி துறைமுகத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: லிபியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அங்கிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், பாதுகாப்பாகவும், எந்த விதமான செலவும் இல்லாமல் வெளியேற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியர்களை அழைத்து வருவதற்காக லிபியாவின் பெங்காசி துறைமுகத்திற்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கப்பல் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. இந்தக் கப்பலில் 1,120 பேருக்கு மேல் பயணிக்க முடியும். இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts