background img

புதிய வரவு

கென்யாவை இன்று எதிர்கொள்கிறது பாகிஸ்தான்

அம்பணத்தோட்டம், பிப். 22: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கென்ய அணிகள் இலங்கையில் உள்ள அம்பணத்தோட்டத்தில் புதன்கிழமை மோதுகின்றன.
2007 உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணியிடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் முதல் சுற்றுடனேயே வெளியேறியது.
அதனால், இந்த முறை எந்த அணியையும் குறைவாக மதிப்பிடக்கூடாது என தனது வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதி அறிவுறுத்தியுள்ளார்.
சோதனை மேல் சோதனை: பாகிஸ்தான் அணி சமீபகாலமாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.
2009-ல் இலங்கை வீரர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் முயற்சி நடைபெற்றதால் அந்த நாட்டில் நடைபெற இருந்த உலகக் கோப்பை ஆட்டங்கள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்துக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
பல வீரர்களும் அவ்வப்போது சூதாட்டப் புகாரில் சிக்கியபோதும், சல்மான் பட், முகமது ஆமீர், முகமது யூசுப் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான், ஒரு நாள் தொடரை 3-2 என வென்றது.உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை வென்ற பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.
வலுவான பேட்டிங்: தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீஸ், அகமது ஷெசாத் ஆகியோர் அனுபவமற்றவர்களாக இருந்தபோதிலும், அதன் பின்னர் முன்னாள் கேப்டனும் மிகுந்த அனுபவசாலியுமான யூனிஸ் கான் அணிக்கு வலுசேர்க்கிறார்.
அவரைத் தொடர்ந்து டெஸ்ட் அணிக் கேப்டன் மிஸ்பா உல் ஹக், கம்ரான் அக்மல், உமர் அக்மல் சகோதரர்கள், அதிரடி வீரர்கள் அப்ரிதி, அப்துர் ரசாக் என பாகிஸ்தான் பேட்டிங் வலுவாகவே உள்ளது.ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் ஷோயிப் அக்தர், உமர் குல், புதுமுக சுழற் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் ஆகியோர் கென்யாவுக்கு கிலி ஏற்படுத்தும் திறமை படைத்தவர்களே.
சமாளிக்குமா கென்யா? 2003 உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதி வரை முன்னேறி அசத்திய கென்யா, இந்தப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 69 ரன்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் சமாளிக்க வேண்டும் என்றால், தொடக்க வீரர் செரண் வாட்டர்ஸ், அனுபவ வீரர் ஸ்டீவ் டிக்கோலோ, காலின்ஸ் ஒடுயா போன்றவர்களையே அந்த அணி நம்பி உள்ளது.
அணிக்கு முன் எவ்வளவு பிரச்னைகள் இருந்தபோதும், அதை மீறி வெற்றி பெறும் திறமை வீரர்களிடம் உள்ளது என்கிறார் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ். அவரது கூற்றை இந்த ஆட்டத்தில் அவரது அணி வீரர்கள் மெய்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தான்: ஷாகித் அப்ரிதி (கேப்டன்), மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், யூனிஸ் கான், அகமது ஷெஸôத், ஆசாத் ஷபிக், ஷோயிப் அக்தர், ஜுனைத் கான், உமர் குல், வஹாப் ரியாஸ், அப்துர் ரெஹ்மான், சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ், அப்துல் ரசாக். கம்ரான் அக்மல் (விக்கெட் கீப்பர்).
கென்யா: ஜிம்மி கமான்டே (கேப்டன்), தன்மய் மிஸ்ரா, செரண் வாட்டர்ஸ், அலெக்ஸ் ஒபாண்டா, ராகேப் படேல், ஜேம்ஸ் கோச்சே, ஷெம் கோச்சே, பீட்டர் ஆங்கான்டோ, எலிஜா ஒட்டினோ, ஸ்டீவ் டிக்கோலோ, தாமஸ் ஒடோயோ, நெஹிமியா ஒடிகியாம்போ, காலின்ஸ் ஒபுயா, டேவிட் ஒபுயா (விக்கெட் கீப்பர்), மௌரிஸ் அவ்மா (விக்கெட் கீப்பர்).
இதுவரை....
இரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ளன. 5 முறையும் பாகிஸ்தானே வென்றுள்ளது.
2003-ல் ஷார்ஜாவில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்ததே கென்யாவுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்சம். 2002-ல் முத்தரப்புத் தொடரின் ஓர் ஆட்டத்தில் நைரோபியில் 179 ரன்கள் எடுத்ததே கென்யாவின் அதிகபட்சம்.
2002-ல் நைரோபியில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் வீரரின் அதிகபட்சம். கென்யத் தரப்பில் அதே ஆட்டத்தில் கே.ஓ.ஓடினோ 59 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம்.
2004-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் அப்ரிதி 11 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதுவே பாகிஸ்தானிய வீரரின் சிறந்த வீச்சாகும்.
1996-ல் கென்யாவில் நடைபெற்ற போட்டியில் டி.எம்.ஒடோயோ 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதே கென்ய வீரரின் சிறந்த வீச்சாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts