background img

புதிய வரவு

திருச்செந்தூர் முருகன் கோவில்

கோவில் வரலாறு:::

திருச்செந்தூர் முருகன் கோவில் இசை முழங்கும் கடலோரம் அமைந்துள்ளது. சூரிய உதயம் முருகனின் கண் முன்பே நடைபெறுகிறது. அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. உலகத்தை ஆளும் மும்மூர்த்தியாக சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர். பெருமாள் சன்னதியில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் வயிற்றின் தொப்புள் கொடியில் அமர்ந்து பிரம்மா அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குறிஞ்சிக் (மலை) கடவுள் முருகன்.

இங்கு கடற்கரையில் சந்தான மலையில் அமர்ந்துள்ளார். "செந்தில் மாமலையுறும் செங்கல்வராயன்'' என்று கந்தசஷ்டி கவசத்தில் தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். வடமொழியில் இதை கந்தமாதன பர்வதம் என்பர். திருமுருகாற்றுப் படையில் இவ்வூர் திருச்சீரலைவாய் எனக் கூறப்படுகிறது. செந்தில் என்ற பெயரும் உண்டு.

செந்து என்றால் உயிர். இல்-அடைக்கலமான இடம். உயிர்களுக்கு அடைக்கலமான இடமான செந்தில், என்ற பெயர் மருவி செந்தூர் என்றாயிற்று. வடமொழியில் ஜெயந்திபுரம் என்று கூறுவர். சேந்து (முருகன்)+இல் என்றும் கூறலாம். சூரனை வென்ற பின்னரே திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருமணம் நடைபெற்றது.

எனவே திருச்செந்தூரே முதற்படை வீடு என்று கூறுவாரும் உண்டு. ஆனால் நக்கீரர் திருப்பரங்குன்றத்தை முதலிலும், திருச்செந்தூரை இரண்டாவதும் குறிப்பிடுகிறார். கடைச்சங்க காலப்புலவர்கள் இவ்வூரைக் குறித்திருப்பதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் சிறப்புற்று விளங்கியதை அறிய முடிகிறது.

அகநானூரில் பரணர் என்னும் புலவர் அலைவாயின் சிறப்பைப் பாடியுள்ளார். புறநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார்மானும் புலவர் "வெண் தலைப்புணரி அலைக்குஞ்செந்தில்'' எனப்பாடுகிறார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "சீர்கெழு செந்தில்'' எனப்பாடி உள்ளார்.

முருகன் கோவிலில் ரூ.3-க்கு சாப்பாடு::

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் ஏழை-எளிய மக்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதால் பல்லாண்டுகளுக்கு முன்பே பச்சரிசி சாதம் விற்பனை கோவில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. தற்போது ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படும் இந்த கட்டி சாதத்தை வாங்கினால் 2 பேர் வரை உண்டு பசி ஆறலாம்.

தினமும் நூற்றுக்கணக்கான கட்டி சாதம் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டி சாதம் கோவில் நிலத்துக்கு குத்தகையாக கிடைக்கும். நெல் மற்றும் விவசாயிகள் காணிக்கையாக செலுத்தும் நெல் மூலம் அரிசி உற்பத்தி செய்து சமையல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கோவில் அன்னதானத் திட்டம் மூலம் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சாப்பிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்ற அனுமன்::::

திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது. திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று. இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.

கேட்டவரம் தரும் வள்ளல் செந்திலாண்டவர்:::

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்துவிட்டு சிவனை பூஜை செய்யும் தவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது கையில் உத்ராட்ச மாலை, அபயகஸ்தம், தாமரை ஆகியவை உள்ளன. மேலும் ஒரு கையால் அவர் பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார். சாந்த சொரூபியாக உள்ள செந்திலாண்டவர் கடல் போல் கருணை மனம் கொண்டவர்.

கடல் பல உயிர்களை பாதுகாத்து அடைக்கலம் கொடுத்துள்ளது போல செந்திலாண்டவர் தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறை தீர்த்து வைக்கிறார். அவர் பக்தர்களை ஆசீர்வதிப்பதால் அவரை தரிசிக்கும் பக்தர்கள் பகையை வென்று வலம் காணுவார்கள் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முருகன் அருளால் பக்தர்கள் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

வரவு-செலவு கேட்கும் முருகன்: சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும் - வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும். கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும்.

அதன்பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.

எல்லா செல்வமும் கிடைக்கும்:::

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தினம் முதல் சஷ்டிதிதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. எல்லா முருகன் கோவில்களிலும் மிகவும் விசேஷமாக இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணியரின் புகழைப்பாடி சண்முக கவசம் முழங்க வலம் வருவார்கள். கந்தசஷ்டி விரதத்தை சிலர் பஞ்சாமிர்தம் மட்டுமே சாப்பிட்டு இருப்பவர்களும் உண்டு. என்றாலும் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.

முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்கள் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசம் மற்றும் சுப்பிரமணிய கவசம். இந்த கவசத்தை எந்த அளவுக்கு நாம் மனம் உருகி சொல்கிறோமோ அந்த அளவுக்கு முருகன் திருஅருள்ளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

6 பொருள்:::

ஆறு சமயங்கட்கும், ஆறு ஆதாரங்கட்கும், ஆறு அத்துவாக்களுக்கும், அறுபடை வீடுகட்கும் அதிபன் ஆறுமுருகப் பெருமான். முருகன் என்ற பெயரும் 6 பொருளைக் கொண்டது. தெய்வத்தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு ஆகிய 6 தன்மைகளை உடையவன் முருகன்.

கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு, மேல், கீழ் என்ற 6 திசைகளிலும் பார்வை உள்ளதால் ஆறுமுகன் என்கிறார் அருணகிரிநாதர். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோ முகமும் சேர்ந்தது ஆறுமுகம்.

தெய்வசிகாமணி:::

நமது உடம்பில் உயர்ந்த பாகம் தலை. அதற்கு மேல் இருப்பது சிகை. அதற்கும் மேல் இருப்பது மணி. அதாவது சிகாமணி மனிதனை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களுள் உயர்ந்தவர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு. இந்த மூவரில் உயர்ந்தவர் சிவன். அவருக்கே உபதேசம் செய்தவர் முருகப்பெருமான். இதனால் தன் உச்சி மேல் வைத்து முருகனை சிவன் பூஜித்தார். இதனால் முருகன் தெய்வசிகாமணி என்ற சிறப்பு நாமத்தைப் பெற்றார்.

தமிழே முருகன்::::

முருகக் கடவுளின் உருவ அமைப்பையும் தமிழ்மொழியின் அமைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமை இருப்பதைக் காணலாம். முருகன் 3 கண் உடையவர். இடதுக் கண் சந்திரன். வலது கண் சூரியன். மத்தியில் அக்னி எனும் நெற்றிக்கண். 6 முகங்களிலும் மொத்தம் 18 கண் தமிழில் வழங்கும் மெய் எழுத்துக்களும் 18.

மெய் எழுத்துக்களில் வல்லினம் 6, மெல்லினம் 6, இடையினம் 6. முருகனின் முகங்களும் 6. தமிழில் உயிரெழுத்துக்கள் 12. முருகனின் தோள்கள் 12. உலகின் தமிழ் மொழியில் மட்டுமே ஆயுத எழுத்து உள்ளது. இச்சை, கிரியை, ஞானம் என்ற 3 சக்திகளின் வடிவம் வேல். இ

து முருகப் பெருமானுக்கே உரிய தனி ஆயுதம். முருகு என்ற சொல்லிலும் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம் என்ற 3 வகை எழுத்துக்களும் அமைந்திருப்பது அருமையிலும் அருமை. இதனால் முருகனை தமிழ்க் கடவுள் என்கிறோம். இதை உணர்ந்த அருணகிரிநாதர் முருகனை, ``செந்தமிழ்ப் பெருமாளே'' என்று அழைத்தார்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல தினமும் நேரடி பஸ் வசதி உள்ளது. மேலும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக இந்த கோவில்லுக்கு செல்ல வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (நேரம் பகல்2 .40 ) உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts