background img

புதிய வரவு

கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி: அரசு தீவிர பரிசீலனை

புதுடில்லி : "அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்திய உணவுக் கழக குடோன்களில், 4 கோடியே 70 லட்சம் டன் கோதுமை மற்றும் அரிசி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 2 கோடியே 50 லட்சம் டன் அதிகமாக உள்ளது. உலக சந்தைகளில், கோதுமைக்கு தேவை அதிகம் உள்ளது. குறிப்பாக, சீனாவில் வறட்சி காரணமாக, கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, இந்த சமயத்தில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து விவாதிப்பதற்காக, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் கூட்டம், இந்த வாரம் கூட இருக்கிறது. இதில், அபரிமிதமாக உள்ள கோதுமை, அரிசியை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி முடிவு செய்யப்படும். அரிசி உற்பத்தியை பொறுத்தமட்டில், இந்தாண்டு, 9 கோடியே 40 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், 8 கோடியே 90 லட்சம் டன்னாக இருந்தது. இந்தாண்டு நல்ல சீதோஷண நிலை இருந்ததால், கோதுமை உற்பத்தி, கடந்தாண்டைவிட, 30 லட்சம் டன் அதிகரித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியை பொறுத்தமட்டில், கோட்டா ஒதுக்கீடுகள் எல்லாம் போக, 5 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிக்கு அனுமதிப்பது பற்றி தீவிரமாக யோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு சர்வதேச அளவில் விலை டன் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. நமது நாட்டை பொறுத்தமட்டில், டன் ஒன்றுக்கு, குறைந்த பட்ச ஏற்றுமதி விலை, 30 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இது, இந்திய வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடையாக உள்ளது. எனவே, இந்த விலை குறைந்தால், சர்வதேச அளவில் இந்திய வெங்காயத்திற்கு போட்டியிருக்கும்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts