background img

புதிய வரவு

திகார் சிறையில் இன்று ராசாவை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்?

டெல்லி: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்துள்ளார். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் பயணம் தொடர்பாக துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி தாஜ்பேலஸ் ஹோட்டலில் ஒரு தொலைக்காட்சி சார்பில் நடைபெறவுள்ள வைர மாநிலங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தப் பயணத்தின்போது திகார் சிறைக்குச் சென்று ராசாவை ஸ்டாலின் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ராசாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 17ம் தேதி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராசா பல நாள் சிபிஐ காவலுக்குப் பின்னர் மார்ச் 3ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உத்தரவிடப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராசாவின் சகோதரரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை:

இந் நிலையில் ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே போல ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது.

கலியபெருமாளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். இந் நிலையில், கலியபெருமாள் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவர் பொறுப்பில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பண பரிமாற்றம் குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவிடம் சிபிஐ நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. சாதிக் பாட்சா, `கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற ஏற்றுமதி நிறுவனத்தையும், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகங்களில் ஏற்கனவே சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

சாதிக் பாட்சாவிடம் நேற்று நடைபெற்ற விசாரணையில், அவரது நிறுவனங்களின் பண விவகாரம், அவருக்கும், ஆ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் ஆகியவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

லூப் டெலிகாம் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை:

இந் நிலையில் கலியபெருமாள், லூப் டெலிகாம் தலைமை செயலதிகாரி சந்தீப் பாசு ஆகியோரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்-சுப்பிரமணிய சாமி வழக்கு:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற, துபாயில் செயல்படும் ஸ்வான் நிறுவனத்துக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டி இருந்தார். அது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் சிபிஐ நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, தனது விசாரணை அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், சுப்பிரமணிய சாமி எழுப்பிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அந்த அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. சுப்பிரமணிய சாமியின் அந்த புகார் மனுவின் விவரம் கிடைக்காததால், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts