background img

புதிய வரவு

ரயில்வே பட்ஜெட் நாளை தாக்கல்: மம்தா இறுதிக்கட்ட ஆலோசனை

புதுடெல்லி: மக்களவையில் 2011-12ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி நாளை தாக்கல் செய்கிறார். இதில், புதிய ரயில்கள், திட்டங்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இந்தக் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தெலங்கானா பிரச்னையை எழுப்பி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மட்டும் நேற்று காலை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை அமைதியாக செயல்பட்டது.

இந்த சூழ்நிலையில் மக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி நாளை தாக்கல் செய்கிறார். 2007-08ம் ஆண்டில் ரயில்வேயிடம் ரூ.25 ஆயிரம் கோடி உபரியாக இருந்தது. 2008-09ல் இது 17,400 கோடியாக குறைந்தது. தற்போது 2010 -11ம் ஆண்டில் வெறும் ரூ.1328 கோடி மட்டுமே உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.94 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு வைக்கப்பட்டது. ஆனால், ஜனவரி 31 வரை ரூ.76 ஆயிரம் கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இலக்கை அடைய இன்னும் 18 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட வேண்டும். இந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் பட்ஜெட் இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ரயில்வே நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை மம்தா வெளியிட்டார். ரயில்வே நிலைமை குறித்து அந்த அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பரில் ரயில்வே பொது மேலாளர்கள் அனைவருக்கும் ரயில்வே போர்டு சேர்மன் விவேக் சகாய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ரயில்வே நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அனைவரும் சிக்கன நடவடிக்கைகளை கையாள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ரயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ரயில்வே பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மம்தா பானர்ஜி, நேற்று டெல்லி ரயில் பவனில் உயர் அதிகாரிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார். இன்றும் ஆலோசனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே மாதம் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் நாளைய பட்ஜெட்டில் மே.வங்கத்துக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம். புதிய ரயில்கள், பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஒருமுறை கூட பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதும் அதே பாணியை பின்பற்ற மம்தா முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts