background img

புதிய வரவு

ஜெகன் உண்ணாவிரதத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு : காங்கிரசில் சலசலப்பு

ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆறு நாட்களாக மேற்கொண்டு வரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர்.
பயிற்சி கட்டண பிரச்னை தொடர்பாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 18ம் தேதி உண்ணாவிரதத்தை துவக்கினார். தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்தும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை.
இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் எரிச்சல் அடைந்தனர். ஜெகனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மாநில காங்கிரஸ் அரசின் மெத்தனத்தை கண்டிக்கும் வகையிலும், நேற்று பாதயாத்திரை மேற்கொண்டனர். ஐதராபாத், இந்திரா பார்க்கிலிருந்து இந்த பாதயாத்திரை துவங்கினர்.
ஜெகனின் தீவிர ஆதரவாளரான சுரேகா, ஆந்திர மாநில சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில், "ஆறு நாட்களுக்கு மேலாக ஜெகன் உண்ணாவிரதம் இருந்தும், அதை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. மாநில அரசின் அக்கறையற்ற செயலைக் கண்டித்தே பாதயாத்திரை மேற்கொண்டோம். எதிர்க்கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, மாநில பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த போது, அமைச்சர்களையும் மற்ற பிரதிநிதிகளையும் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்திய மாநில அரசு, ஜெகனின் உண்ணாவிரதத்தை மட்டும் கண்டு கொள்ளவில்லை. இது பழிவாங்கும் செயல்' என்றார்.
உண்ணாவிரதத்தை துவக்கியது முதல், ஜெகனை 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டாக்டர்களின் ஆலோசனைப்படி ஜெகன் தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஜெகன் நிராகரித்து விட்டார்.
சஸ்பெண்ட்: இதற்கிடையில், ஆந்திர சட்டசபையில், நேற்று தெலுங்கானா பிரச்னையை எழுப்பி, நிதி அமைச்சர் ராமநாராயண ரெட்டியை பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் தடுத்த 11 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பா.ஜ., வைச் சேர்ந்தவர். மற்ற நான்கு பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள். காலை 11.43 மணி அளவில் நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க முற்பட்ட போது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அவரின் கையிலிருந்த பட்ஜெட் நகலை பறிக்க முற்பட்டனர்.
உடன், அங்கு பெருமளவில் குழுமியிருந்த சபைக் காவலர்கள் அவர்களை தடுத்து வெளியேற்றினர். இதையடுத்து, டி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. இதன்பின், நிதி அமைச்சர் மீண்டும் பட்ஜெட் உரையை படிக்கத் துவங்கிய போது, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று, தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் நிதி அமைச்சரை நோக்கிச் சென்ற போது, சபைக் காவலர்கள் தடுத்தனர். இதன்பின் பா.ஜ., மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானமும் சபையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில், 48 மணி நேர "பந்த்' நடந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts