மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நாவலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரளம் தி.மு.க. நகரச் செயலர் பன்னீர் செல்வத்தை கைது செய்யக் கோரி தமிழக காவல்துறை இயக்குநர் லத்திகா சரணிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை இயக்குநர் லத்திகா சரணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஜெ.நாவலன் கடந்த 19ஆம் தேதி கள்ளச்சாராய சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ள 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இக்கொலைக்கு காரணமான பன்னீர்செல்வம் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பன்னீர்செல்வம் ஆளும் தி.மு.க.வின் பேரளம் பேரூர் நகரச் செயலராக உள்ளார். இதன் காரணமாகவே ஏற்கனவே இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும் காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதில தயக்கம் காட்டி வந்துள்ளது. மேலும் பன்னீர்செல்வம் தொடர்ந்து பேரளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட ஏராளமான சமூக விரோதக் காரியங்களை மேற்கொண்டு வந்துள்ளார். இவை அனைத்தும் காவல்துறையினருக்கு தெரிந்தே நடந்து வந்துள்ளது. இவைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியும், நாவலனும் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அவரை திட்டமிட்டு பன்னீர்செல்வம் படுகொலை செய்துள்ளார்.
பன்னீர் செல்வத்தின் மூலம் நாவலன் உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறையினருக்கு அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நாவலன் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். கொலை நடந்த பின்னரும் முக்கிய குற்றவாளியான பன்னீர்செல்வம் கைது செய்யப்படவில்லை என்பது பலவிதமான சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, பன்னீர்செல்வத்தையும், மீதம் உள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.
0 comments :
Post a Comment