பெங்களூரு: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி "டை ஆனது. கடைசி பந்து வரை நெஞ்சம் படபடத்த இப்போட்டியில், இரு அணிகளும் தலா 338 ரன்கள் எடுக்க, எத்தரப்புக்கும் வெற்றி வசப்படவில்லை. இந்திய அணிக்கு சச்சின் சதம் மற்றும் ஜாகிர் கானின் அபார பந்துவீச்சு கைகொடுத்தது. இங்கிலாந்து சார்பில் கேப்டன் ஸ்டிராஸ் சதம்(158) வீணானது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இந்திய அணியில் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டு, பியுஸ் சாவ்லா வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னணி பவுலர் ஸ்டூவர்ட் பிராட் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அஜ்மல் ஷெஜாத் சேர்க்கப்பட்டார். ரவி போபரா நீக்கப்பட்டு, மைக்கேல் யார்டி இடம் பெற்றார். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சச்சின் சதம்:
ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று முறை கண்டம் தப்பினார் சேவக். பின் டிம் பிரஸ்னன் வேகத்தில் கீப்பர் மட் பிரயாரின் சூப்பர் "கேட்ச்சில் சேவக்(35) அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். கோலிங்வுட், ஸ்வான் பந்துகளை வரிசையாக சிக்சருக்கு பறக்க விட்ட இவரது ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில், காம்பிர்(51), ஸ்வான் பந்தில் போல்டானார். பிரஸ்னன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சச்சின், உலக கோப்பை அரங்கில் 5வது சதம் அடித்து சாதனை படைத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 47வது சதம். பின் ஸ்வான் சுழலில் இன்னொரு சிக்சர் அடித்து அசத்தினார். ஆண்டர்சன் வேகத்தில் சச்சின் 120 ரன்களுக்கு(10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.
யுவராஜ் அசத்தல்:
இதற்கு பின் கேப்டன் தோனி, யுவராஜ் சேர்ந்து விவேகமாக ஆடினர். ஷாஜத் வீசிய போட்டியின் 43வது ஓவரில் தோனி இரண்டு பவுண்டரி விளாசினார். இவரது அடுத்த ஓவரில் யுவராஜ் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். யார்டி பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரைசதம் கடந்த யுவராஜ்(58), யார்டி பந்தில் அவுட்டானார்.
பிரஸ்னன் 5 விக்.,:
கடைசி கட்டத்தில் துல்லியமாக பந்துவீசிய பிரஸ்னன், இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். இவரது வேகத்தில் தோனி(31) நடையை கட்டினார். போட்டியின் 49வது ஓவரை வீசிய பிரஸ்னன், முதலிரண்டு பந்துகளில் யூசுப் பதான்(14), விராத் கோஹ்லியை(8) வெளியேற்றினார். இதையடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த ஜாகிர் ஒரு ரன் எடுக்க, வாய்ப்பு நழுவியது. 4வது பந்தில் ஹர்பஜனையும்(0) அவுட்டாக்கிய பிரஸ்னன், தனது 5வது விக்கெட்டை பெற்றார். கடைசி ஓவரில் சாவ்லா(2), ஜாகிர்(4) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 49.5 ஓவரில் 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நல்ல துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முனாப் பந்தில் ஸ்டிராஸ் கொடுத்த "கேட்ச்சை ஹர்பஜன் கோட்டை விட்டார். அப்போது அவர் 22 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
ஸ்டிராஸ் அசத்தல்:
முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், முனாப் வேகத்தில் பீட்டர்சன்(31) வீழ்ந்தார். சாவ்லா சுழலில் டிராட்(16) வெளியேறினார். இதற்கு பின் ஸ்டிராஸ், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். யூசுப் பதான் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட ஸ்டிராஸ், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதத்தை எட்டினார். தொடர்ந்து மிரட்டிய இவர், யுவராஜ் சுழலில் ஒரு "சூப்பர் சிக்சர் அடித்தார். மறுபக்கம் சாவ்லா பந்தை இயான் பெல், சிக்சருக்கு அனுப்ப, இந்திய ரசிகர்கள் நொந்து போயினர்.
ஜாகிர் திருப்புமுனை:
இந்த நேரத்தில் போட்டியின் 43வது ஓவரை வீசிய ஜாகிர் கான் இங்கிலாந்துக்கு இரட்டை "அடி கொடுத்தார். நான்காவது பந்தில் இயான் பெல்லை(69) வெளியேற்றினார். 5வது பந்தில் ஸ்டிராஸ்(158) அவுட்டானார். இதனை எதிர்த்து இங்கிலாந்து அப்பீல் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் "ஹாட்ரிக் வாய்ப்பு இருந்தது. ஆனால், பிரயார் தடுத்து ஆட, வாய்ப்பு நழுவியது. மீண்டும் மிரட்டிய ஜாகிர், கோலிங்வுட்டை(1) போல்டாக்கினார். ஹர்பஜன் சுழலில் பிரயார்(4) காலியானார். முனாப் பந்தில் யார்டி(13) வெளியேற, இந்தியா வெற்றியை நெருங்கியது. அப்போது 49வது ஓவரை வீசிய சாவ்லா சுழலில் ஸ்வான், பிரஸ்னன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
6 பந்தில் 14 ரன்கள்:
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. முனாப் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்வான் 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ஷாஜாத் ஒரு சிக்சர் அடிக்க, "டென்ஷன் எகிறியது. நான்காவது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ஸ்வான் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் ஸ்வான் ஒரு ரன் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி, சமநிலையை("டை) எட்டியது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பவுலிங் ஏமாற்றம்:
பேட்டிங்கில் அசத்திய போதும், கடைசி கட்டத்தில் பவுலிங்கில் சொதப்பியதால், இந்திய வெற்றி நழுவியது.
ஆட்ட நாயகன் விருதை ஸ்டிராஸ் தட்டிச் சென்றார்.
நான்காவது "டை
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி "டை ஆனது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், "டையில் முடிந்த நான்காவது போட்டி என்ற சோகமான பெருமை பெற்றது. முதன்முதலில் கடந்த 1999ல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான போட்டி "டை ஆனது. அதன்பின் தென் ஆப்ரிக்கா-இலங்கை (2003), அயர்லாந்து-ஜிம்பாப்வே (2007) அணிகள் மோதிய போட்டி "டை ஆனது.
சச்சின் "உலக சாதனை!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், மார்க் வாக் உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து
-----------
மூன்றாவது இடம்
நேற்றைய போட்டியில் விளையாடிய சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41 போட்டி), மெக்ராத் (39 போட்டி) ஆகியோர் உள்ளனர்.
----
56 ரன்கள் தேவை
உலக கோப்பை அரங்கில், 2000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, சச்சினுக்கு இன்னும் 56 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை இவர் 38 போட்டியில் பங்கேற்று 1944 ரன்கள் எடுத்துள்ளார்.
----
இன்னும் இரண்டு சதம்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
---
அதிக பவுண்டரி
நேற்றைய போட்டியில் மொத்தம் 10 பவுண்டரி அடித்த சச்சின், தனது 7வது பவுண்டரியை கடந்த போது, உலக கோப்பை அரங்கில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 38 போட்டியில் 203 பவுண்டரி அடித்துள்ளார்.
* நேற்று 5 சிக்சர் விளாசிய சச்சின், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். இவர் இதுவரை 24 சிக்சர் விளாசியுள்ளார். முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் கங்குலி (25 சிக்சர்) உள்ளார்.
--------
இந்தியா "338
நேற்று 338 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2003ல் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
* தவிர இது, சர்வதேச அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட, 2வது அதிகபட்சம். முன்னதாக கடந்த 2008ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்தது.
* இது, உலக கோப்பை அரங்கில் இந்திய அணியின் 4வது சிறந்த அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக 413/5 (எதிர்-பெர்முடா, 2007), 373/6(எதிர்-இலங்கை, 1999), 370/4(எதிர்-வங்கதேசம், 2011) ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
* இது, பெங்களூரு மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 2003ல் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கு, இந்திய அணி மூன்றாவது முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்தது.
----
சேவக் "1000
நேற்று 35 ரன்கள் எடுத்த இந்திய துவக்க வீரர் சேவக், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின் (1455 ரன்கள்), யுவராஜ் சிங் (1187 ரன்கள்) உள்ளிட்டோர், இப்பெருமை பெற்றனர்.
---
"ரன் வள்ளல் ஆண்டர்சன்
நேற்று 9.5 ஓவர்கள் வீசிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி, 91 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பவுலர்கள் வரிசையில் 5வது இடம் பிடித்தார். தவிர இவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக 91 ரன்கள் வழங்கி தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் 91 ரன்கள் வழங்கினார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் ஸினிடன், 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
---
ஸ்கோர்போர்டு
இந்தியா
சேவக்(கே)பிரையர்(ப)பிரஸ்னன் 35(26)
சச்சின்(கே)யார்டி(ப)ஆண்டர்சன் 120(115)
காம்பிர்(ப)சுவான் 51(61)
யுவராஜ்(கே)பெல்(ப)யார்டி 58(50)
தோனி(கே)சப்-ரைட்(ப)பிரஸ்னன் 31(25)
யூசுப்(கே)சுவான்(ப)பிரஸ்னன் 14(8)
கோஹ்லி(ப)பிரஸ்னன் 8(5)
ஹர்பஜன் எல்.பி.டபிள்யு.,(ப)பிரஸ்னன் 0(1)
ஜாகிர்-ரன் அவுட்(பிரஸ்னன்/பிரையர்) 4(5)
சாவ்லா ரன்-அவுட்(ஆண்டர்சன்) 2(4)
முனாப்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 15
மொத்தம் (49.5 ஓவரில் "ஆல் அவுட்) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-46(சேவக்), 2-180(காம்பிர்), 3-236(சச்சின்), 4-305(யுவராஜ்), 5-305(தோனி), 6-327(யூசுப் பதான்), 7-327(கோஹ்லி), 8-328(ஹர்பஜன்), 9-338(சாவ்லா), 10-338(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஆண்டர்சன் 9.5-0-91-1, ஷெசாத் 8-0-53-0, பிரஸ்னன் 10-1-48-5, சுவான் 9-1-59-1, கோலிங்வுட் 3-0-20-0, யார்டி 10-0-64-1.
இங்கிலாந்து
ஸ்டிராஸ் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 158(145)
பீட்டர்சன் (கே)+(ப)முனாப் 31(22)
டிராட் எல்.பி.டபிள்யு.,(ப)சாவ்லா 16(19)
பெல் (கே)கோஹ்லி (ப)ஜாகிர் 69(71)
கோலிங்வுட் (ப)ஜாகிர் 1(5)
பிரையர் (கே)சப்-ரெய்னா (ப)ஹர்பஜன் 4(8)
யார்டி (கே)சேவக் (ப)முனாப் 13(10)
பிரஸ்னன் (ப)முனாப் 14(9)
சுவான் -அவுட் இல்லை- 15(9)
ஷாக்ஜாத் -அவுட் இல்லை- 6(2)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 338
விக்கெட் வீழ்ச்சி: 1-68(பீட்டர்சன்), 2-111(டிராட்), 3-281(பெல்), 4-281(ஸ்டிராஸ்), 5-285(கோலிங்வுட்), 6-289(பிரையர்), 7-307(யார்டி), 8-325(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ஜாகிர் 10-0-64-3, முனாப் 10-0-70-2, சாவ்லா 10-0-71-2, ஹர்பஜன் 10-0-58-1, யுவராஜ் 7-0-46-0, யூசுப் 3-0-21-0.