background img

புதிய வரவு

காங்கிரசுடன் இணைப்பா? மறுக்கிறார் சந்திரசேகர் ராவ்


ஐதராபாத் : "தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை, காங்கிரசுடன் இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. எங்கள் கட்சி, மிகவும் பலம் வாய்ந்தது' என, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறினார். நடிகர் சிரஞ்சீவி, தன் பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள மேலும் சில கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என்றும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், காங்கிரசுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: எங்கள் கட்சி, காங்கிரசுடன் இணையப் போவதாக, சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. காங்கிரசுடன் எங்கள் கட்சியை இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. பிரஜா ராஜ்யம் கட்சியைப் போல், எங்கள் கட்சி சினிமா கட்சி அல்ல. எங்கள் கட்சி மிகவும் பலம் வாய்ந்தது. மற்ற கட்சிகளில் இருந்து விலகி, எங்கள் கட்சியில் ஏராளமானோர் இணைகின்றனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், எங்கள் கட்சி உதயமானது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு சம்மதித்தால், கட்சியை காங்கிரசுடன் இணைப்பீர்களா என, சிலர் கேட்கின்றனர். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு எல்லாம், என்னால் பதில் அளிக்க முடியாது.
விரைவில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கப் போகிறது. இந்த கூட்டத் தொடரில் தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப் போகிறோம். இதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க உள்ளேன்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிராக, சிரஞ்சீவி தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். தற்போது அவரது கட்சி காணாமல் போய் விட்டது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவர், காங்கிரஸ் மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என கூறுகிறார். இது வரவேற்கத்தக்க முடிவு. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts