background img

புதிய வரவு

எகிப்தில் மக்கள் கிளர்ச்சி உச்ச கட்டம்: "செப்டம்பரில்தான் விலகுவேன் - முபாரக்; வெள்ளிக்கிழமைதான் கடைசி - மக்கள்'

கெய்ரோ,பிப்.2: ""எகிப்து நாட்டு அதிபர் பதவியிலிருந்து உடனே விலக மாட்டேன், செப்டம்பர் மாதம் இப்போதைய பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுகிறேன், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்'' என்று ஹோஸ்னி முபாரக் (82) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் வாக்குறுதி அளித்தார்.
மக்கள் நிராகரிப்பு: ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை. ""அதெல்லாம் வேண்டாம், 30 ஆண்டுகள் ஆண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கியது போதும், வரும் வெள்ளிக்கிழமைதான் உங்களுக்கு கடைசி நாள், அன்றோடு பதவியிலிருந்து ஓய்வு பெறுங்கள், பதவி விலகாவிட்டால் எங்கள் வீடுகளுக்குத் திரும்பமாட்டோம், வீதிகளில் இருந்துகொண்டே கிளர்ச்சி செய்வோம்'' என்று நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அவருக்குப் பதில் அளித்துவிட்டார்கள்.
ஒபாமா கண்டிப்பு: நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் 30 நிமிஷங்கள் தொலைபேசி மூலம் உரையாடினார் முபாரக். ""முபாரக் நீங்கள் ஆண்டது போதும், மக்கள் எழுச்சி கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னால் விலகிவிடுங்கள், அது உங்களுக்கும் எகிப்துக்கும் நல்லது, வீணாக ரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் ஒபாமா.
பதவி விலகல் பற்றி முதல்முறையாக: ஒபாமா போன்ற உலகத் தலைவர்கள் தனக்கு தார்மிக ஆதரவு தந்தால் கிளர்ச்சிக்காரர்களை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற ரகசிய திட்டம் முபாரக்கின் நெஞ்சில் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இந்த உரையாடலுக்குப் பிறகு நாட்டு மக்களிடம் பேசுகையில் பதவி விலகலைப் பற்றி முதல் முறையாகப் பேசினார்.
செப்டம்பர் வரை ஏன்? அதிபர் பதவிக்கான சட்டத்தைத் திருத்த வேண்டியிருப்பதாலும் அடுத்தவரிடம் பதவியை சுமுகமாக ஒப்படைக்க நிர்வாக ரீதியாகச் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாலும் செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க விரும்புவதாக முபாரக் தெரிவித்திருக்கிறார்.
முபாரக் பேசியது என்ன? ""நாட்டின் இப்போதைய நிலைமை எப்படி இருந்தாலும், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மேலும் ஒரு முறை பதவி வகிக்க நான் விரும்பவில்லை என்பதை மிகுந்த நேர்மையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் எகிப்தை விட்டு ஓடமாட்டேன்; எகிப்து மண்ணிலேயேதான் உயிரை விடுவேன். ஆட்சி அதிகாரத்தைச் சுமுகமாக அடுத்த தலைவரிடம் ஒப்படைப்பதற்காகவும், அதிபர் பதவிக்கான சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்காகவும் செப்டம்பர் வரையில் பதவியில் நீடிக்க விரும்புகிறேன்'' என்று முபாரக் பேசினார்.
அவருடைய பேச்சு தொலைக்காட்சியில் 8 நிமிஷங்களுக்கு ஒளிபரப்பானது. அரசை எதிர்க்கும் கிளர்ச்சிக்காரர்கள் எல்லா ஊர்களிலும் பெரிய பெரிய சதுக்கங்களில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரையில் அவருடைய தொலைக்காட்சி உரையைக் கேட்டனர்.
உடனே வெளியேற கோஷம், ஏளனக்குரல்: செப்டம்பர் வரை பதவியில் இருப்பேன் என்று முபாரக் கூறியதும் ஓ... என்று கத்தியும் ஊளையிட்டும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ""பதவியில் இருந்தது போதும் உடனே வெளியேறு'' என்று ஆவேசமாகக் குரல் எழுப்பினர். ""வெள்ளிக்கிழமைதான் உங்களுக்குக் கடைசி நாள்'' என்றும் கோஷமிட்டனர். கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுடைய எதிர்ப்புக்குரல் நகர சதுக்கங்களில் எதிரொலித்தது.
கெய்ரோவில் 10 லட்சம் பேர்: தலைநகர் கெய்ரோவில் தாரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடி, ""முபாரக்கே, போ போ போ'' என்று கோஷம் எழுப்பினர்.
இந்த இடத்துக்கு வருவதற்காக பெரும்பாலானவர்கள் கார், பஸ், ஸ்கூட்டர், சைக்கிள் போன்ற வாகனங்கள் எதிலும் வராமல் நடந்தே வந்தனர். கொடுங்கோலரின் ஆட்சியை நீக்குவதை ஒரு தவமாகக் கருதி தங்களுடைய உடல் சிரமத்தையும் பாராமல் பொது நன்மைக்காக அவர்கள் கூடியது பார்ப்பவர்களையும் பரவசப்படுத்தியது.
கைகலப்பு: ""அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா உரிமைகளையும் படைத்தவர்கள் இளைஞர்கள்'' என்று சாதாரணமாக பேச்சைத் தொடங்கிய முபாரக், திடீரென குரலை கடுமையாக்கிக் கொண்டு, ""இந்த இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய ஆட்சியை சீர்குலைக்க அரசியல் எதிரிகள் முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்'' என்று குற்றஞ்சாட்டினார்.
அதிலிருந்தே அவர் பதவியை விட்டு விலகத் தயாராக இல்லை என்பது புரிந்துவிட்டது. அவர் பேசி முடித்ததும் இளைஞர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பியபோது திடீரென சிலர் அவர்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினர். பதிலுக்கு இளைஞர்கள் தாக்கத் தொடங்கிய பிறகே அவர்கள் ஓய்ந்தனர்.
நாட்டின் தலைநகரம் கெய்ரோ, சூயஸ், அலெக்சாண்டிரியா போன்ற நகரங்களில் மோதல்கள் ஆங்காங்கே மூண்டன. அலெக்சாண்டிரியாவில் திடீரென துப்பாக்கியால் சுடும் ஓசை தொடர்ந்து கேட்டது. அப்போது ராணுவ டேங்க் ஒன்று இளைஞர்களை நோக்கி வேகமாக முன்னேறி அவர்கள் அருகில் சென்றவுடன் நின்று பிறகு தான் ஆரம்பத்தில் இருந்த இடத்துக்கே வந்துவிட்டது.
இரண்டாவது முறையாக டி.வி.யில் பேச்சு: கடந்த 9 நாள்களில் இரண்டாவது முறையாக முபாரக் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களைத் திருப்திப்படுத்த தன்னுடைய அமைச்சரவையிலிருந்த எல்லோரையும் ராஜிநாமா செய்யச் சொன்னார். துணை அதிபர் என்ற பதவியைக்கூட ஏற்படுத்தி அதில் ஒருவரை நியமித்தார். ஆனால் எதுவும் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை.
எல்பராடி கண்டனம்: முபாரக் எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆதரவு தந்துவரும் முகம்மது எல் பராடி, இந்தப் பேச்சே ஏமாற்று வேலை என்று சாடினார். இதற்குப் பிறகும் அவர் பதவி விலகாமல் இருந்தால் நடைப்பிணமாகத்தான் இருக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
முபாரக் பேசியதை ஏற்க முடியாது என்று மக்கள் தெரிவித்துவிட்டார்கள், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றார் இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பின் முன்னணித் தலைவரான சாத் அல் கடாத்னி.
டுனீசியா தந்த ஊக்கம்: எகிப்து அதிபர் பதவியில் முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் ஆட்சி செய்கிறார். அவருடைய ஆட்சியில் திருப்தி இல்லாவிட்டாலும் ஏதோ சகித்துக்கொண்டே வாழ்ந்தனர்.
ஆனால் டுனீசியா நாட்டில் 23 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்த ஜைனுல் ஆபுதீன் பெனானியின் ஆட்சியை அந்த நாட்டு மக்கள் திரண்டெழுந்து அகற்றிவிட்டனர் என்ற செய்தி எகிப்திய மக்களையும் விழித்தெழ வைத்தது.
எனவே கடந்த 9 நாள்களாக எகிப்து முழுக்க மக்கள் வேறு வேலை எதையும் பார்க்காமல் அதிபரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான கிளர்ச்சியிலேயே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts