background img

புதிய வரவு

நியூஸீலாந்தை வீழ்த்தித் தொடரை வென்றது பாகிஸ்தான்

ஹேமில்டனில் நடைபெற்ற பாகிஸ்தான், நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் 3- 1 என்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் துவக்க வீரர் அகமட் ஷேஜாதின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. இலக்கைத் துரத்திய நியூஸீலாந்து 46.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவி தொடரையும் இழந்தது.

நியூஸீலாந்து கடைசி 15 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற நியூஸீலாந்து முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தது. ஹஃபீஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷேஜாத் அதிரை முறையில் ஆடினார்.

அடுத்த 9 ஓவர்களில் ஸ்கோர் 73 ரன்களுக்குச் சென்றாலும் அதில் கம்ரன் அக்மல் 17 ரன்கள்தான் எடுத்தார். தவிரவும் ஆட்டமிழக்கவும் செய்தார். யூனிஸ் கான் (21), மிஸ்பா (25), உமர் அக்மல் (32) அஃப்ரீடி (24) ஆகியோர் பெரிய அளவுக்கு சோபிக்க முடியவில்லை.

அகமட் ஷேஜாத் 109 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் விளாசி 38-வது ஓவரில் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான் 197/4 என்று இருந்தது. அதன் பிறகு 13 ஓவர்களில் 71 ரன்களை மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது.

நியூஸீலாந்து தரப்பில் மில்ஸ், ஓரம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஃப் ஸ்பின்னர் நேதன் மெக்கல்லம் சிக்கனமாக வீசி 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்டைரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலக்கைத் துரத்திய நியூஸீலாந்து முதல் பந்திலேயே ஜெஸ்ஸி ரைடரின் விக்கெட்டை மிஸ்பாவின் நேரடி த்ரோவிற்கு ரன் அவுட்டாக இழந்தது.

அதன் பிறகு மார்டின் கப்தில் 70 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார் ஆனால் அவரை அக்தர் வீழ்த்தினார். ராஸ் டெய்லர் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 91 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவுடன் நியூஸீலாந்தின் வாய்ப்புகள் குறைந்தது.

இடைப்பட்ட ஓவர்களை ஷொயப் அக்தரும், மொகமட் ஹஃபீஸும், உமர் குல்லும் சிக்கனமாக வீசினர். அக்தர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

-வஹாப் ரியாஸ் அருமையான யார்க்கர் ஒன்றின் மூலம் ஃபார்மில் உள்ள பிராங்கிளின் விக்கெட்டைக் கைப்பற்ற நியூஸீலாந்துக்கு ரன் விகிதம் 10 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

கடைசியில் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், குல், அஃப்ரீடி தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்ற அக்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்த நியூஸீலாந்து அணி 227 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த அகமட் ஷேஜாத் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts