background img

புதிய வரவு

பழனி முருகன் கோவில்

கோவில் ஸ்தல வரலாறு :


பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது.


இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.


ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என்று அறிவித்தார். குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார்.


ஆனால் விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த,கோபமும் அடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.


முருகன் சிலையின் சிறப்பு:


இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனபது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது.


தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு பின் (சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்தும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது.


போகர் சந்நிதி :


இந்த கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார் என்பது வரலாறு. அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார்.


போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவையும் உள்ளன. போகரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது. திருஆவினன்குடி: மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும்.


இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இந்த கோவிலில் முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.


முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவறையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.


பூஜைகள் :


முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.


தங்கரதம் :


ஒவ்வொரு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.


தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.


விழாக்கள் :


முருகனுக்கு உகந்த நாட்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.


அன்னதானம்:


கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.


வின்ச் சேவை :


தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது.


இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும். ரோப் கார் : தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும்.


போக்குவரத்து வசதி :


சென்னையில் இருந்து பழனிக்கு பேருந்து வசதி உள்ளது.ரெயில் வசதியும் உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.


மேலும் விவரங்களுக்கு:


இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
தேவஸ்தானம்
அலுவலகம் அடிவாரம்,
பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts