background img

புதிய வரவு

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி இல்லை: டோனி பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 9 தினங்களே உள்ளது. உலக கோப்பை போட்டிக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் டோனி இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுவதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதோடு இந்திய அணி விளையாடும்போது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் மற்ற போட்டிகளை விட உலக கோப்பை மிகப் பெரிய போட்டியாகும்.

இதனால் அதற்கு ஏற்றவாறு நாங்கள் திட்டமிட்டு விளையாடுவோம். 2007 உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றிலே வெளியேற்றப்பட்டதால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். உலக கோப்பை போட்டி என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடி இல்லை. ஆனால் பொறுப்பு கூடுதலாக இருப்பதாக நினைக்கிறேன்.

இந்திய அணி அனுபவம் வாய்ந்தது. அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் நெருக்கடி நேரத்தில் எப்படி ஆடுவது என்பது அவர்களுக்கு தெரியும். மேலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை வாய்ந்த இளம்வீரர்களும் அணியில் உள்ளனர்.

இந்திய துணைக் கண்டத்தில் ரன்சேஸ் செய்வதை விட முதலில் பேட்டிங் செய்வது சிறந்தது என்று கருதுகிறேன். பவர்பிளே ஆட்டத்தின் தன்மையை மாற்றும்.தெண்டுல்கருக்கு இது கடைசி உலக கோப்பை போட்டியாகும்.

நாங்கள் உலக கோப்பை போட்டிக்காக எல்லா வகையிலும் தயாராகி வருகிறோம். போட்டி அட்டவணை திருப்தி அளிக்கிறது. போட்டியின் தொடக்கத்தை விட மத்தியில் அதிக பரபரப்பு இருக்கும். “நாக்அவுட்” சுற்று பரபரப்பாக இருக்கும். “லீக்” ஆட்டங்களில் தொய்வு இருப்பதாக கருத முடியாது. ஏனென்றால் கடந்த உலக கோப்பையில் சிறிய அணிகள் அதிர்ச்சி கொடுத்தன.

இதனால் எல்லா போட்டிகளும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் எல்லா அணிகளும் அபாயகரமானதே. ஒவ்வொரு அணிக்கு அதன்பலம் தெரியும். பெரும் பாலான அணிகள் பந்து வீச்சில் பலம் பொருந்தியவையாக இருக்கும் என்று கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், 20 ஓவர் போட்டிக்கும் இடையே மாறுபட்டது 50 ஓவர் போட்டி. நான் ஒருநாள் போட்டியின் ரசிகன் ஆவேன். ஒருநாள் போட்டியை நேசிக்கிறேன். அதற்காக டெஸ்ட் அல்லது, 20 ஓவர் போட்டியை விரும்பவில்லை என்று அர்த்தம் கிடையாது.

பிரவீன்குமார் சிறந்த வீரர். நேர்த்தியுடன் பந்து வீசக் கூடியவர். அவர் காயத்தால் உலக கோப்பையில் ஆட முடியாமல் போனது துரதிருஷ்டமே. அவரை நாங்கள் அதிகமாக இழந்து வருகிறோம். சில வீரர்கள் லேசான காயத்தில் இருக்கலாம். அது எப்போதும் நடக்க கூடியதுதான். ஆனால் கவலைப்படும் படும்படி ஒன்றும் இல்லை. எந்த ஒரு வீரருக்கும் பயப்படும்படி பெரிய அளவிலான காயம் இல்லை.

இவ்வாறு டோனி கூறினார்.

ஷேவாக், காம்பீர், தெண்டுல்கர் ஆகியோர் காயத்தில் இருந்து தற்போது முழு குண மடைந்து விட்டனர். உலக கோப்பை போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம்பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்தை 19-ந் தேதி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் மிர்பூரில் நடக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுடன் 13-ந்தேதியும், நியூசிலாந்துடன் 16-ந்தேதியும் விளையாடுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts